கட்சி தொடங்கி சரியாக ஒரு ஆண்டு மட்டுமே முடிந்துள்ள நிலையில் கமலின் மக்கள் நீதி மய்யத்தின் முக்கியப்புள்ளிகள் பலரும், அதுவும் தேர்தல் நெருங்கும் நிலையில், தொடர்ந்து வெளியேறி வருவதால் படு பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம் கமல்.

மக்கள் நீதி மய்யத்திலிருந்து அதன் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும், கடலூர் தொகுதி வேட்பாளராகவும் போட்டியிட இருந்த நேச்சுரல்ஸ் நிறுவனத் தலைவர் சி.கே.குமரவேல்இரு தினங்களுக்கு முன்பு கட்சியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து அக்கட்சியின் கடலூர் வடக்கு மண்டல பொறுப்பாளர் வெங்கடேஷ், கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகினார். 

கட்சி தொடங்கி ஓராண்டு முடிந்த நிலையில் இப்படி நிர்வாகிகள் வரிசையாகப் பதவி விலகி வருவதால், கமல் கடும் வருத்தத்தில் இருக்கிறாராம். தனது வருத்தத்தை நெருக்கமானவர்களிடத்திலும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அப்போது குமரவேல் ராஜினாமா தொடர்பாக கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், “அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்வதற்குக் கீழ் மட்டத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். மேலும், அவர் என் மீது குற்றச்சாட்டு வைத்தால் அது குறித்து பதிலளிக்கிறேன்” என்று பதில் தெரிவித்தார்.

கமலின் இந்த மெத்தனப்போக்கை ஜீரணிக்க முடியாமல் மேலும் சிலர் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், தாங்கள் வெளியேறும் செய்தியை மீடியாவுக்குச் சொல்லி கமலுக்கு தர்ம சங்கடத்தைத் தரவேண்டாம் என்ற நல்லெண்ணத்துடன் இன்னும் இரு முக்கியபுள்ளிகள் வெளியேறியிருக்கிறார்கள். அதில் ஒருவர் கட்சியின் பொருளாளர் சுரேஷ் கண்ணன் என்கிற சுகா. திரைப்பட இயக்குநரான சுகா, இளையராஜா, கமல் ஆகிய இருவருக்குமே மிக நெருக்கமானவர். கமல் கட்சி துவங்கிய நாளிலிருந்தே அவரது நிழல் போல் பின் தொடர்ந்து இருந்தவர்.

இவரைப் போல சொல்லிக்கொள்ளாமல் எஸ்கேப் ஆன இன்னொருவர் பேராசிரியரும் பட்டிமன்றப் பேச்சாளருமான ஞான சம்பந்தன். மக்கள் நீதி மய்யத்தில் துணைத் தலைவராக இருந்த இவரும் ஓரிரு தினங்களுக்கு முன்பு கமலிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் நழுவி விட்டார்.