கமலே போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராமநாதபுரம் தொகுதிப் பக்கம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் இன்னும் தலையைக் கூட காட்டாததால் அத்தொகுயின் கமல் ரசிகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் தொகுதியில் கமல்ஹாசனே நிற்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அளிக்கப்பட்டன. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் வரை அங்கு கமலே போட்டியிடுவார் என்று உறுதியாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது  கட்சியின் வேட்பாளராக சென்னை மதுராவயலைச் சேர்ந்த லோட்டஸ் சோலார் எனர்ஜி உரிமையாளர் ஜா. விஜயபாஸ்கரை கடந்த 24-ம் தேதி கமல் அறிவித்தார். 

கமல் நிற்காவிட்டாலும் பரவாயில்லை உள்ளூர் வேட்பாளர் அல்லது சினிமா பிரபலம் யாரையாவது நிறுத்தியிருக்கலாம் என்று அக்கட்சியினர் புலம்பி வந்த நிலையில்  அதன்பிறகு வேட்புமனுவைத் தாக்கல் செய்ததோடு எஸ்கேப் ஆன  விஜய பாஸ்கர், தொகுதியில் இதுவரை பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை.

இது குறித்துப் புலம்பிய கமல் ரசிகர்கள், ”மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார். கட்சி சின்னம் இல்லாத அமமுக வேட்பாளர் வ.து.ந. ஆனந்த்தும் கிராம் கிராமமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், எங்கள் கட்சி வேட்பாளர் வேட்புமனுவை மட்டும்  தாக்கல் செய்து விட்டு சத்தமில்லாமல் உள்ளார். கமல்ஹாசன்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பில் முதற்கட்ட தேர்தல் பணிகளை செய்து வந்தோம். தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களை நடத்தி, அதன்பிறகு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் அலு வலகம் திறக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்றனர்.

ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய ஏப்ரல் 9ம் தேதிதான் கமல் வருகிறார். அவர் வரும்போது தொகுதிப்பக்கம் எட்டிப்பார்த்தால் போதும் என்று வேட்பாளர்  விஜய பாஸ்கர் நினைக்கிறாரோ என்னவோ அது அந்த ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவருக்கே வெளிச்சம்.