விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் செல்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்  மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும் அநேகமாக நாளை கமல் கேப்டனை அவரது இல்லத்தில் சந்திக்ககூடும் என்றும் ம.நீ.மய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக அரசியலில் கூட்டணி விவகாரங்கள் க்ளைமேக்ஸை நெருங்கியுள்ளன. ஆனால் விஜயகாந்தின் தே.மு.தி.க. மட்டும் இன்னும் தனது கூட்டணியை இறுதி செய்யாமல் இழுத்தடித்து வருகிறது. சில யூகங்கள் அவர் அ.ம.முக.வுக்கோ அல்லது கமலின் மக்கள் நீதி மய்யத்துக்கோ கூட செல்லக்கூடும் என்கின்றன.

இதுகுறித்து அ.ம.மு.க. வட்டாரம் மவுனம் காத்துவரும் நிலையில் கமலின் ம.நீ.ம. வட்டாரங்கள் அழுத்தமாக மறுக்கின்றன. விஜயகாந்துடன் கூட்டணி சேரும் எண்ணம் கமலுக்கு எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் அவர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய நாளிலிருந்தே அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க கமல் ஆர்வமுடன் இருப்பதாகவும், தே.மு.தி.க. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் முன்பு அந்த சந்திப்பு நடந்தால் அது அரசியலாக்கப்படும் என்பதால் கமல் தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இன்று இரவுக்குள் தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை உறுதி செய்துவிடும் என்பதால் நாளை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து மட்டுமே விசாரிக்க கமல் செல்வார் என்று தகவல்.