கோட்டையை நோக்கி அரசியல் பயணம் தொடங்கிவிட்டது !!  ரசிகர்களுக்கு உற்சாகமளித்த  நடிகர் கமலஹாசன் !!!

ஒரு கட்சிக்கு தலைமை ஏற்கும் தைரியம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால் அதற்கான வேலையை இந்த சுபமுகூர்த்த வேளையில் தொடங்குங்கள் என்றும் கோட்டையை நோக்கி அரசியல் பயணத்தை ஆரம்பியுங்கள்  என்றும் நடிகர் கமலஹாசன் தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த ரசிகர் ஒருவரின் இல்ல திருமண வரவேற்பு விழா கோவை ஈச்சனாரியில் நடைபெற்றது.

இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.அப்போது  இதை திருமண விழாவாக நினைக்காமல் ஆரம்ப விழாவாக எண்ணுகிறேன். அரசியல் சூழலை இப்படியே விட்டு வைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நமது கடமை என கமல் தெரிவித்தார்.

ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை நாம்தான் அனுமதித்து விட்டோம் என்றும், இனி அதற்கு இன்னொரு வாய்ப்பு தரக்கூடாது என்றும் கமல் கேட்டுக் கொண்டார்.

இந்த சமூகத்தின் மீதான கோபம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் நிலையில்  அரசியலை மாற்ற வேண்டியது நமது கடமை. என்றும் கமலஹாசன் தெரிவித்தார்.

தமிழகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும் என்று கூறிய கமலஹாசன், இது திருமண விழா அல்ல என்றும்  ஆரம்ப விழா என்றும் கூறினார். 

ஒரு கட்சிக்கு  தலைமை ஏற்க தைரியம் வந்து விட்டதா என்று என்னை பார்த்து கேட்கிறார்கள். நான் கேட்கிறேன், தலைமை ஏற்க உங்களுக்கு தைரியம் வந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது அவரது ரசிகர்கள் தைரியம் உள்ளது…தைரியம் உள்ளது… என உற்சாகக் குரல் எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், அப்படியென்றால் கோட்டையை நோக்கி அரசியல் பயணத்தை தொடங்குங்கள் என ரசிகர்களிடம் கூறினார்.