இந்தியாவில் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளையுடன் அரசு பிறப்பித்த  144 தடை உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. மகாராஷ்ட்ரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளன. 

இந்நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு ஒன்று மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர்  உணவு, சமையல் பொருட்களை மக்களுக்கு வழங்க அரசு தடை விதித்துள்ளது. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவ விரும்புவோர் நிதியை முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், பொருட்களை சென்னை மாநகர ஆணையரிடமும் வழங்கலாம். பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நிவாரண பொருட்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் பிரபல நடிகை... ஓவர் கிளாமர் போட்டோஸை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்...!

சில நபர்களும், சில அமைப்புகளும், அரசியல்  கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக,  பல்வேறு இடங்களில் உணவு பொருட்களையும் அல்லது  அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரடியாக வழங்குவது, தடை உத்தரவை மீறும் செயல் என்று தெரிவித்துள்ள தமிழக அரசு. இதுபோன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால், நோய் தொற்று பரவ வழிவகுக்கும்  என்றும், இந்த சமயத்தில் தன்னார்வலர்கள் பொருட்களை நேரடியாக மக்களுக்கு கொடுத்து நோய் தொற்று பரவ வழிவகை செய்ய வேண்டாம் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் அரசின் இந்த உத்தரவை மீறி செயல்பட்டால், ஊரடங்கு உத்தரவை மீறியதாக கருதி தக்க சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


தமிழக அரசின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், அண்டை மாநிலங்கள் சில கொரோனா உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப்பலரின் உதவியை நாடிப்பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டிவிடுகிறது. வேலை தெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். இது கமிஷன் வாங்குவதற்கோ, ஒதுக்கி வைப்பதற்கோ ஏற்ற நேரமல்ல. மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.