கோமாளி படத்தில் ரஜினியை கிண்டல் செய்து வைத்திருந்த காட்சி அவரது ரசிகர்களை கொந்தளிக்கச் செய்த நிலையில் அவரது நண்பரான கமலையும் வருத்தம் அடையச் செய்துள்ளது.

நேற்று முன்தினம் வெளியான கோமாளி படத்தின் டிரெய்லர் தற்போது பட்டி தொட்டி எங்கும் பிரபலம். அதற்கு காரணம் படத்தில் ரஜினியின் அரசியல் வருகையை கிண்டல் செய்து வைக்கப்பட்டிருந்த காட்சி தான். ரஜினி 1996 முதலே அரசியல் வருகை குறித்து ஹிண்ட் கொடுத்து வருகிறார். எப்போது வருவேன், எப்படி வருவேன் என்று எனக்கு தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவேன் என்பது தான் ரஜினி ரசிகர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் ஹிண்ட்.

முத்து திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த அந்த வசனத்தை நம்பிக் கொண்டு தான் ரசிகர்கள் ரஜினியின் அரசியல் வருகையை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 31ந் தேதி ரஜினி அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது தனியாக கட்சி ஆரம்பித்து அரசியல் களத்தில் இறங்க உள்ளதாக தெரிவித்தார்.

இப்படி ரஜினி அறிவிப்பு வெளியிட்டு இன்றோடு ஒன்றரை வருடங்கள் ஒரு மாதம் மற்றும் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் தற்போது வரை ரஜினி கட்சியின் பெயரை கூட அறிவிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தான் கோமாளி படத்தில் கோமாவில் இருந்து எந்திருக்கும் ஜெயம் ரவி ரஜினியின் அரசியல் வருகை தொடர்பான செய்தியை பார்த்துவிட்டு இது 1996 என்று கூறுவார். இதன் மூலமாக 1996ல் இருந்தே ரஜினி இப்படித்ததான் கூறிக் கொண்டிருக்கிறார் ஆனால் வந்தபாடில்லை என்று இயக்குனர் விமர்சித்திருந்தார்.

இதனை ரஜினி ரசிகர்கள் காமெடியாக கடந்து செல்லவில்லை. மாறாக பாய்காட் கோமாளி என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி அகில இந்திய அளவில் ட்விட்டரில் டிரெண்ட் செய்தனர். மேலும் கமலும் கூட தயாரிப்பாளர் ஐசரி கணேசனை அழைத்து ரஜினியின் அரசியல் வருகையை இப்படி கிண்டல் செய்திருக்க கூடாது என்று வருத்தப்பட்டதாக கூறுகிறார்கள். ஐசரி கணேசனும் கமலும் நெருங்கிய நண்பர்கள். 

அதே சமயம் ஐசரி கணேசனுக்கு திமுகவுடனும் கணெக்சன் உண்டு என்கிறார்கள். அடிப்படையில் அவர் திமுக அனுதாபி என்றும் கூறிக் கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் ஐசரி கணேசன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்கு காரணம் அவருடைய திமுக தொடர்புகள் தான் என்று பேசப்பட்டது. மேலும் திமுகவின் தேர்தல் செலவுக்கு ஐசரி கணேசன் மூலமாக தேவையானது கொடுக்கப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.

இந்த நிலையில் கோமாளியில் இப்படி ஒரு கலாய் சீனை இயக்குனர் வைத்திருந்தாலும் தயாரிப்பாளரின் அனுமதி இல்லாமல் அதை படமாக்கியிருக்கமுடியாது என்று கூறுகிறார்கள்.