தனது முன்னாள் காதல் முறிந்தது தொடர்பாக தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் அடுத்த புதிய காதலரை சந்திக்க மிகுந்த ஆர்வமுடன் காத்திருப்பதாகவும் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் கூறியுள்ளார். முந்தைய காதல் முறிவை ஒரு அனுபவமாக மட்டுமே எடுத்துக்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்து வந்தார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தன் காதலை முறித்துக்கொண்டார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் பதிவிட்ட ஸ்ருதிஹாசன், புதிய அத்தியாயம் தொடங்குகிறது எனக்குறிப்பிட்டார். அதேபோல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட மைக்கேல், நாங்கள் தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளோம் எனத் தெரிவித்தார்.

மைக்கேல் கார்சலுடன் காதல் வயப்பட்டிருந்தபோது படங்களில் நடிப்பதை சுத்தமாக நிறுத்தியிருந்த ஸ்ருதி அடுத்து ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ‘லாபம்’படத்தில் ஒப்பந்தமாகி பிசியாக நடிக்கத்தொடங்கியதோடு, மீண்டும் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடர்ந்து கதை கேட்க ஆரம்பித்தார். தந்தை கமல் கலந்துகொண்ட இளையராஜாவின் பிறந்தநாள் நிகழ்ச்சி, மற்றும் பிக்பாஸ் சீஸன் 3 நிகழ்ச்சிகளிலும் உற்சாகமாகக் கலந்துகொண்டார்.

இந்நிலையில் தனது காதல் முறிவு  குறித்து பொதுவெளியில் அதிகம்  பேசாதிருந்த ஸ்ருதிஹாசன், முதன்முதலாக தன் காதல் முறிவு குறித்து பேசியுள்ளார். தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனிடம்  அவரது காதல் முறிவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்குப் பதில் அளித்த அவர்,காதலுக்கு இது தான் விதி என்றும் எதுவும் இல்லை. நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள், அதே நபர்கள் சில நேரங்களில் மோசமானவர்கள். காதல் முறிவால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இது ஒட்டுமொத்தமாக எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.நான் நிறைய கற்றுக்கொண்டேன், அது ஒரு கற்றல் அனுபவம்தான். நான் அடுத்த  ஒரு சிறந்த காதலுக்காக காத்திருக்கிறேன். அது கிடைத்தவுடன், மகிழ்ச்சியாக உங்களிடம் நான் பகிர்ந்துகொள்வேன்’என்றார். சொல்லீட்டீங்கள்ல உங்க ட்விட்டர் பக்கத்துல ஆயிரக்கணக்குல கியூவுல நிக்கிறாங்க பாருங்க.