kamal criticizes tamil people in big boss show
தமிழ் கலாச்சாரத்தை மேலும் மேன்மைப்படுத்தும் வகையிலான ‘பெரிய தலைவரு’ (அதானுங்க... பிக் பாஸ்) எனும் நல்லொழுக்க ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்க இருக்கிறார் கமல்ஹாசன்.
இதற்காகவே வேதமந்திரங்கள் முழங்க அண்ணாருக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும். ஆனால் அந்த கடமையை நாம் செய்யத்தவறியிருக்கும் நிலையில், அந்த ஷோவுக்கான ப்ர்மோஷன் விளம்பரம் ஒன்றில் தோண்றி தமிழனை செருப்பை கழட்டி அடியோ அடியென அடித்திருக்கிறார் கமல்.
அது என்ன விவகாரம்? என்று உள்ளே செல்லும் முன், ’பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோ பற்றி தெரிந்து கொள்ளுங்கள். சினிமா, டி.வி. உள்ளிட்ட சில துறைகளை சேர்ந்த பிரபலமான 14 நபர்கள் கிட்டத்தட்ட 100 நாட்கள் வரை ஒரு வில்லாவினுள் அடைக்கப்படுவார்கள்.
டாய்லெட், குளியலறையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 30 கேமேராக்களை வைத்து இவர்களின் செயல்பாடுகள் லைவ்வாக பதிவு செய்யப்படும். ஆமாங்னா பெட்ரூமிலும்தான் கேமெரா வைத்திருப்பார்கள்.
துவக்க நாட்களில் சந்தோஷமாக பொழுதை கழிக்க துவங்கும் அந்த எடுபட்ட....மன்னிக்கவும், அடைபட்ட நபர்கள் பிறகு மெதுவாக வேறு விதமான ரியாக்ஷன்களை காட்ட துவங்குவார்கள். அவர்களுக்குள் நடக்கும் நட்பு, காதல், மோதல், துரோகம், சந்தோஷம், குழுவை வழிநடத்தும் தன்மை, குழிபறிப்பு என துவங்கி ‘அது’ வரையிலும்...யெஸ் சிலர் வந்த இடத்தில் ஜோடியாகி கில்மாக்களில் இறங்கினால் அதையும் கூட இந்த கேமெராக்கள் பதிவு செய்யும்.
இதில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு ஏடாகூடமான விஷயங்களை நமக்கு எடிட் பண்ணி காட்ட்போகிறது அந்த தொலைக்காட்சி. வாரம் வாரம் சிலர் எலிமினேட் ஆகவும் செய்வார்கள். எல்லா பஞ்சாயத்துகளையும் தாண்டி இறுதி வரை தாக்குப்பிடிக்கும் நபருக்கு மெகா பரிசுத்தொகை காத்திருக்கிறது.
இப்பேர்ப்பட்ட ஒழுக்கம் மிளிரும் ஷோவைத்தான் நம்ம கமல் தொகுத்து வழங்க இருக்கிறார். (அவருக்கு ஏற்ற ஷோதான் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.)
இந்த ஷோவுக்கான ப்ரமோஷன் விளம்பரம் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இதில் நடித்திருக்கும் கமல்ஹாசன் மக்களைப் பார்த்து சில விஷயங்களை சொல்வது போல் விளம்பரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். அதில் மக்களை பார்த்து அவர் முன் வைக்கும் சில விமர்சனங்கள் பொது சமுதாயத்தை பெரிதளவில் காயப்படுத்துவதாக விமர்சகர்கள் குறிப்பிட்டு, இதை சொல்ல கமலுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று தாளிக்கிறார்கள்.
அந்த விளம்பரத்தில் தோன்றும் கமல்... ‘நான் சினிமாவில் நிறைய வேஷம் போட்டிருக்கேன். நாயகனா, வில்லனா, குள்ளனா...’ என்று நீட்டுபவர் தான் இந்தியனாக வேஷமும் போட்டிருக்கிறேன், இந்தியனாக வாழ்ந்து கொண்டும் இருக்கிறேன். என்று தற்பெருமை பேசுகிறார். சரி ஒர்த்தான கலைஞன், பேசட்டும் பரவாயில்லை என்று ரசிக்கலாம்.
ஆனால் தன்னை விட அதிக வேஷம் போட்டது யாரா இருக்கும் சொல்லுங்க? என்று கேட்பவர் அது மக்கள் தான் என்று பொது சமுதாயத்தை கைநீட்டுகிறார். அதற்கு விளக்கமும் கொடுப்பவர், ‘வீட்டில் ஒரு முகம், வெளியில் ஒரு முகம், ஓட்டு போட காசு வாங்கும்போது ஒரு முகம், ஓட்டு போடும் போது ஒரு முகம்....’ என்று அடுக்குபவர் இதில் எது உண்மையான முகம்? என்று கேட்கிறார்.
மக்களின் பல்வேறு முகங்களாக எடுத்துச் சொல்ல ஆயிரம் விஷயங்கள் இருக்க ஓட்டுக்கு பணம் வாங்குகிறோம் என்று பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்ட இவர் யார்? தமிழ்நாட்டில் ஓட்டுப்போடும் அத்தனை வாக்காளர்களும் காசு வாங்கிக் கொண்டுதான் ஓட்டு போடுகிறார்களா? கமல் எப்படி அப்படி ஒரு முடிவுக்கு வந்தார்? எந்த ஆதாரத்தில் மக்களின் ஜனநாயக பற்றை இப்படி அசிங்கப்படுத்தி பேசுகிறார்? என்று கேள்விகளை அடுக்குகிறார்கள் விமர்சகர்கள்.
தமிழகத்தில் ஏற்கனவே சீரழிந்து கொண்டிருக்கும் பண்பாட்டை மேலும் ரணகளமாக்கும் வகையில் உருவெடுக்கும் இந்த ‘பெரிய தலைவரு’ ஷோவை கமல் தொகுத்து வழங்க வந்ததே தப்பு, இதில் மக்களை வேறு குறை சொல்வதா? என்று கேட்பவர்கள் ‘என் வீட்டு ஜன்னலை எட்டிப்பார்க்காதீர்கள்!’ என்று ஒரு காலத்தில் வீரவசனம் பேசிய கமல் இப்போது காசுக்காக பதினாலு பேர் அடைந்து கிடக்கும் வீட்டை ஏன் திறந்து பார்க்கிறார்? என்று போட்டுத்தாக்கி இருக்கிறார்கள்.
இதைவிட ஹைலைட்டாக...’சாதாரண மக்களாகிய எங்களுக்கு எத்தனை முகங்கள் இருக்குதுன்னு எங்களுக்கு தெரியும் மிஸ்டர்.கமல்.
ஆனால் உங்களுக்கு எத்தனை முகம் இருக்குதுன்னு வாணி, ஸ்ரீதேவி, சரிகா, சிம்ரன், கெளதமி இன்னும் நினைவில் நின்றாலும் பெயரை வெளியே சொல்ல விரும்பாத சில பெண்களிடம் கேட்டால் தெரியும். ஆனால் அவர்கள் அத்தனை பேரும் சொல்லும் பல முகங்களில் உங்களின் உண்மை முகம் எது?’
என்று நெத்தியடியாக கேட்டிருக்கிறார்கள்.
பதில் சொல்லுங்க பிக் பாஸின் பாஸ்!
