சொன்னதை மட்டும் செய்யுங்க... மாற்றங்கள் நம்மிடமிருந்து துவங்க வேண்டும்... தொண்டர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட கமல்...!

நவம்பர 7ம் தேதி உலக நாயகன் கமல் ஹாசனின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாட அவரது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் முடிவு செய்துள்ளது. 3 நாட்கள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை தனது பிறந்த நாளும், தந்தையின் இறந்த நாளும் ஒன்றாக வருவதால்,  முதலில் தந்தை ஸ்ரீனிவாசனின் உருவச்சிலையை சொந்த ஊரான பரமக்குடியில் திறந்துவைக்கிறார் கமல் ஹாசன். அடுத்த நாள் ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் இயக்குநர் இமயம் பாலச்சந்தர் உருவச்சிலையை திறந்துவைத்து மரியாதை செலுத்துகிறார். அன்று மாலை சத்யம் திரையரங்கில் கமலின் ஹேராம் திரைப்படம் திரையிடப்படுகிறது. படம் முடிந்த பிறகு ரசிகர்களுடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார் கமல். அதன்பின்னர் நவம்பர் 9ம் தேதி மாலை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவிருந்த இளையராஜாவின் இசைக் கச்சேரி, நவம்பர் 17ம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடக்க உள்ளது.

இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்களுக்கு அன்பு கட்டளை போட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் கமல் ஹாசன். அதில் 'நவம்பர் 7ஆம் தேதி எனது பிறந்த நாள்‌ அன்று, பரமக்குடியில்‌ எனது தந்தையார்‌ அய்யா சீனிவாசன்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலையினைத்‌ திறக்கவுள்ளோம்‌ என்பதை தாங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌. அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள்‌, தொண்டர்கள்‌ மற்றும்‌ ரசிகப் பெருமக்கள்‌ எவ்விதத்திலும்‌ பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய வகையில்‌ பேனர்கள்‌, ஃப்ளெக்ஸ்‌ மற்றும்‌ கொடிகள்‌ போன்றவற்றைக் கட்டாயம்‌ தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்‌.

இவ்விசயத்தில்‌ எவ்வித காரணங்களும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும்‌ சமரசங்கள்‌ செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும்‌ கண்டிப்பாக தெரிவித்துக் கொள்கின்றேன்‌. என்று உறுதியாக தெரிவித்துள்ளார். மேலும் இனி நிகழவிருக்கும் அரசியல் மற்றும் ஆட்சி முறைகளில், மக்கள் நீதி மய்யம் கட்சி கொண்டு வரவிருக்கும் மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பது எனது விருப்பம். அனைவரும் ஆவன செய்வீராக என கட்டளை பிறப்பித்துள்ளார்.