வரும் ஜூன் 10ம் தேதி வரை‘களவாணி 2’ படத்தைத் திரையிட நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் பிரச்சினை தொடர்பாக விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார் இயக்குநர் சற்குணம்.

சற்குணம் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு வெளியான படம் ‘களவாணி’. விமல், ஓவியா, ஆகியோர்  நடித்த இந்தப் படத்தில், கஞ்சா கருப்பு, சூரி, இளவரசு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.9 வருடங்களுக்குப் பிறகு இதன் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. ‘களவாணி 2’ படத்தில் விமல், ஓவியா நடிக்க, முக்கியக் கதாபாத்திரங்களில் கஞ்சா கருப்பு, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடித்துள்ளனர். இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். சற்குணமே படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்நிலையில்,  ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘களவாணி 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜூன் 10-ம் தேதி வரை படத்தை வெளியிட இடைக்காலத்தடை விதித்தார். 
அந்த நீதிமன்ற உத்தரவால் அதிர்ந்துபோன சற்குணம் தனது தரப்பு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், “வர்மன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நான் இயக்கி, தயாரித்துள்ள படம் ‘களவாணி 2’. இந்தப் படம் திரைக்கு வரத் தயாராக உள்ள நிலையில், தனலட்சுமி பட நிறுவனத்தைச் சேர்ந்த குமரன் இடைக்காலத்தடை பெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்தி பார்த்தேன்.தனலட்சுமி நிறுவனத்துக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவரை நான் சந்தித்தது கூட இல்லை. ஆனால், என் படத்துக்கு ஏன் இடைக்காலத்தடை வாங்கினார் எனத் தெரியவில்லை. அவருடன் இருக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனிடம் இதுகுறித்துப் பேசினேன். “இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை. விமல் பிரச்சினை ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காகத் தடை வாங்கியிருப்பார்கள். சரி பண்ணிக் கொள்ளலாம்” என சிங்கார வேலன் தெரிவித்தார்.

நான் கிராமத்தில் இருந்து வந்து இயக்குநராகி, மண்ணையும், மக்களின் வாழ்க்கையையும் படமாக்கி, தேசிய விருது பெற்றவன். ரிலீஸ் சமயத்தில் எனக்கு இப்படி ஒரு சிக்கல் வந்திருப்பது கஷ்டமாக இருக்கிறது. எனக்கும், அந்த நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. விமலுக்கும் அவர்களுக்கும் என்ன பிரச்சினை என்பது எனக்குத் தெரியாது. ஒருவேளை அவர்களுக்கு இடையில் பிரச்சினை இருந்தால், அதற்கு நானோ, என்னுடைய வர்மன்ஸ் புரொடக்‌ஷன் நிறுவனமோ பொறுப்பேற்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதிமன்றத்தின் மீது நான் அளவுகடந்த நம்பிக்கை வைத்துள்ளேன். ஏனென்றால், நான் சாதாரண மனிதன். சாதாரணமானவர்கள் நிறைய உழைக்கிறோம். சாதாரண மக்களுக்கான நீதியை எப்போதுமே நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்த வகையில், எனக்கான நீதியையும் நீதிமன்றம் வழங்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் சற்குணம்.