’இந்தியன் 2’ படத்தின் புதிய துவக்கம் குறித்து இன்னும் ஓரிரு தினங்களில் லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில் வட இந்திய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்த அப்பட நாயகி காஜல் அகர்வால் தன்னிடம் ஜூன் 1 முதல் பட நிறுவனம் கால்ஷீட் வாங்கியுள்ள ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையில் படத்தைத் தொடர்வது குறித்துப் பெரும் பஞ்சாயத்து நிலவி வந்த நிலையில் ஷங்கர் படத்தை வேறொரு நிறுவனத்துக்குக் கொண்டுபோவதில் மும்முரமாக இருந்தார்.அது ஏறத்தாழ வெற்றிக்கோட்டைத் தொடப்போன நேரத்தில் லைகா நிறுவனம் ஷங்கருக்கும் கமலுக்கும் சரியான முட்டுக்கட்டை ஒன்றைப் போட்டது.

‘இந்தியன் 2’ வை வேறு நிறுவனத்துக்குக் கொண்டுபோவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் அப்படிப்போகும் பட்சத்தில் கமல் எங்களது தயாரிப்பான ‘சபாஷ் நாயுடு’வுக்கு வாங்கிய அட்வான்ஸ் 25 கோடி ரூபாய், ‘இ 2’ படத்துக்கு இதுவரை செலவழிக்கப்பட்டுள்ள 65 கோடி ஆக மொத்தம் 90 கோடியை எங்களுக்கு செட்டில் பண்ணினால் ஒழிய வேறு யாரும் இப்படத்தைத் தயாரிக்கவிடமாட்டோம்’ என்று கறாராகக் கூறவே ஷங்கர் வெலவெலத்துப்போய்விட்டார்.

அத்தோடு ஷங்கர் லைகா நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற சம்மதிக்கவே தற்போது ஷெட்யூல் போடும் வேலைகள் துரிதப் படுத்தப்பட்டுள்ளன. ஜூன் 1 முதல் படப்பிடிப்பில் நடிகை காஜல் கலந்துகொள்ள பிக்பாஸ்3’யில் பிசியாக இருக்கும் கமல் தனது தேதி விபரங்களை இன்னும் ஒருவாரத்திற்குள் தெளிவாகச் சொல்லிவிடுவதாகத் தெரிவித்திருக்கிறாராம்.