Kaala tickets sold out only for first day

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக உள்ள ரஜினிகாந்த், இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமையாகவும் உள்ளார். ரஜினி படம்னாலே அது திருவிழா போல கொண்டாடப்படும். இந்த முறை முன்பைவிட பரபரப்புகள் அதிகம் காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம், விரைவில் நிகழ உள்ள ரஜினியின் அரசியல் பிரவேசம். மேலும் தினம் அவர் வெளியிடும் அரசியல் அறிக்கை என அவரை சுற்றி அனல் காற்றுக்கு பஞ்சமில்லை. இந்த அனல் அப்படியே தியேட்டர்களிலும் தீயாய் திகுதிகுக்கும் என பார்த்தால் முன்பதிவுக்கே ‘ஆளைக்காணோம்’ என திரையரங்க உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுதான் வாடிக்கை. ஆனால் நாளை வெளிவரும் ’காலா’விற்கு வழக்கத்திற்கு மாறான தமிழகத்தில் சூழ்நிலை நிலவுகிறது. நாளை மற்றும் 8ம் தேதிகளை தவிர, வார நாட்களில் ‘காலா’ படத்திற்கான முன்பதிவு பெரியளவு இல்லை. இதை திரையரங்குகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனை மூலம் நேரடியாக பார்க்க முடிகிறது. ரஜினி படங்களுக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது கிடையாது.

நாளை வெளிவரும் படத்திற்கு வார இறுதி நாட்கள், வார நாட்கள், அடுத்த வாரம் முழுவதும் என டிக்கெட் புக்கிங் குவியும். இந்த வரலாறு ’காலா’ படத்திற்கு ஏற்படவில்லை. படம் வெளிவரும் தினத்தை தவிர மற்ற நாட்களில் ’காலா’ படத்தை பார்க்க ரசிகர்கள் முன்பதிவு செய்வது மிகவும் குறைந்துள்ளது. சில திரையரங்குகளில் படம் வெளிவரும் நாளிலும் புக்கிங் மந்தமாகவே உள்ளது. 

இதுகுறித்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள், கோடை விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளிகள் தொடங்கியுள்ளன, பணியாளர்களும் அலுவலங்களுக்கு செல்லத்தொடங்கியுள்ளனர். ’காலா’ புக்கிங் குறைந்துள்ளதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர். தமிழகத்தின் சில முக்கிய நகரங்களில் மினிமம் கேரண்டி முறையில் படம் விநியோகிக்கப்பட்டுள்ளது. தவிர, விளம்பர பணிகளும் பெரியளவில் இல்லை. இதனாலும் புக்கிங்கில் மந்தமான சுழ்நிலை நிலவுதாக கூறப்படுகிறது. 

ஆனால் ரஜினி படங்கள் பெரியளவில் எதிர்பார்க்கப்படும் படங்களுக்கு கார்ப்பரேட் அலுவலகங்கள் பல்க் புக்கிங் செய்துவிடுவது வழக்கம். ஆனால் இம்முறை அவர்களும் ’காலா’ படத்தை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கிடையில் ஆன்லைன் மூலம் திரைப்பட டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பிரபலம் இணையதளம் ஒன்று, ’காலா’ படத்திற்கு இதுவரை செய்யப்பட்ட புக்கிங் விவரங்களை வெளியிடவில்லை.

குறைந்தளவிலான புக்கிங் தான் இதற்கு காரணம் என தகவல்கள் வெளிவந்துள்ளது. எனினும் ’காலா’ படத்திற்கு சத்யம் சினிமாஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்பை வைத்து தான் மற்ற நகரங்களில் உள்ள திரையரங்குகளில் படம் பற்றிய வசூலை அறிந்துக்கொள்ள முடியும் என்கிறார்கள் பாக்ஸ் ஆஃபிஸ் கணக்காளர்கள். அதேபோல, சென்னை மாயாஜால் திரையரங்கில் பில்லா 2 திரைப்படம் 110 ஷோக்கள் ஓடின இதற்குமுன் இதுவே அதிகம். ஆனால் காலா திரைப்படம் அதை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 95 ஷோக்கள் மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.