அரசியல் தலைவர்கள் வாழ்க்கை, சினிமா பிரபலங்களின் வாழ்க்கை, விளையாட்டு வீரர்கள், மற்றும் சாதித்த பலரது வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற உண்மை கதைகளை பற்றி அறிந்து கொள்ள மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதால், இது போன்ற படங்களை இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் துணிந்து எடுக்க முன்வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது மறைந்த சட்ட மன்ற உறுப்பினர் காடு வெட்டி குருவின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்துள்ளனர். 

இந்த படத்திற்கு 'மாவீரன் ஜெகுரு' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படத்தை தமிழ்த்தாய் பிச்சர்ஸ் பட நிறுவனம் தயாரிக்க உள்ளதாவும் கூறப்படுகிறது. அந்த பட நிறுவனம், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "காடு வெட்டி குருவின் வாழ்க்கை அதிக பொருட் செலவில் படமாக்கப்படுகிறது. இதில் முன்னணி நடிகர் - நடிகைகள் நடிக்க உள்ளனர்.

காடு வெட்டி குரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் தேர்வு தற்போது நடந்து வருகிறது. மற்ற நட்சத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடக்கிறது. காடு வெட்டி குருவின் மகன் கனலரசன் மேற்பார்வையில் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அரியலூர், பெரம்பலூர், நெய்வேலி, பண்ரூட்டி, மற்றும் சென்னை ஆகிய இடங்களின் படப்பிடிப்பு நடைபெறும். இந்த படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர்.