கடந்த வாரத்துக்கு  முன்பே நாம் அறிவித்திருந்தபடியே சூர்யா, ஆர்யா, மோகன்லாலை தான் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘காப்பான்’ என்றே பெயர் சூட்டியுள்ளார் இயக்குநர் கே.வி. ஆனந்த்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அடுத்த படத்துக்கு பெயர் சூட்டும் வைபவத்தில் ரசிகர்களுக்கும் பங்களிப்பதாகவும் தான் குறிப்பிடும் மூன்று தலைப்புகளில் அதிக ரசிகர்களால் லைக்’கப்படும் தலைப்பையே படத்துக்கு சூட்டப்போவதாகவும் ஒரு டகால்டி பப்ளிசிட்டி வேலையில் கே.வி. ஆனந்த் இறங்கியிருந்தார். கூடவே காப்பான், மீட்பான், உயிர்கா என்ற மூன்று தலைப்புகளையும் அறிவித்திருந்தார்.

அச்செய்தி வெளியானவுடன் அது ஒரு மோசடி வேலை. ‘காப்பான்’ என்ற தலைப்பை முடிவு செய்துவிட்டே கே.வி. ஆனந்த் ரசிகர்களை சீட்டிங் செய்கிறார் என்று குறிப்பிட்டிருந்தோம். தற்போது பூனைக் குட்டி அதே தலைப்புடன் வெளியே வந்துவிட்டது.

இன்று ‘காப்பான்’ டிசைன்களை ஆனந்த் வெளியிட்டார். இதில் சூர்யா, கோர்ட், சூட்டுடன் கையில் துப்பாக்கி வைத்தபடி தோற்றமளிக்கிறார். மற்றொரு போஸ்டரில், சூர்யா, மோகன் லால், ஆர்யா இடம்பெற்றுள்ளனர். மோகன்லால் இந்த படத்தில் பிரதமராக நடித்து வருகிறார். பிரதமரை பாதுகாக்கும், பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சிரக் ஜனி என பல்வேறு பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா சய்கல் நடிக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜனவரி 17-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. அதற்குள் என்ஜிகே படப்பிடிப்பை முடித்துவிட்டு சூர்யா விரைவில் ’காப்பான்’ படக்குழுவில் இணையவிருக்கிறார்.

மக்களை இப்பிடி ஏமாத்துனீங்கன்னா ‘காப்பான்’ படத்தை எவன் பாப்பான் மிஸ்டர் கே.வி. ஆனந்த்?