கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தலாலா’ படத்தில் இளையராஜா இசையில் பாடிய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ’தமிழரசன்’படத்துக்கு அவரது இசையில் பாடியுள்ளார். அந்த நீண்ட இடைவெளிக்குப் பிராயச்சித்தமாக அவருக்கு பூன்கொத்து கொடுத்து வரவேற்றுப் பாடவைத்தார் ராஜா.

ராஜாவின் இசையில் ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே’,’பூவே செம்பூவே உன் வாசம் வரும்’,’கல்யாணத் தேன் நிலா’ உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ள கே.ஜே.ஜேசுதாஸ் 2010 ஆண்டு வெளிவந்த மிஷ்கினின் ‘நந்தலாலா’ படத்தில் ‘ஒண்ணுக்கொண்ணு’ பாடலைத்தான் கடைசியாகப் பாடியுள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக ஜேசுதாஸை ராஜா ஏன் பாட அழைக்கவில்லை என்பது தெரியவில்லை.

இந்நிலையில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ரம்யா நம்பீசன் நடித்துவரும் ‘தமிழரசன்’ படத்துக்கு நேற்று ஜேசுதாஸ் பின்னணி பாடினார். முழு நீள அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு ஜெயராம் எழுதிய "பொறுத்தது போதும் ... பொங்கிட வேணும் புயலென வா " என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ‘தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசனுடன் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர்,  சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் என்று மாபெரும் நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது.