தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைதி என கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கார்த்தி நடித்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் "தம்பி". உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து "பாபநாசம்" படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடித்துள்ளார். சத்யராஜ், செளகார் ஜானகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வஸந்தா இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

நேற்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  மலையாளத்தில் மோகன் லாலும், தெலுங்கில் நாகர்ஜூனாவும் "தம்பி" பட டீசை வெளியிட்டுள்ளனர். தமிழ் டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சூர்யா, தனது தம்பி கார்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். டீசரில் இடம் பெற்றுள்ள அதிரடி சண்டை காட்சிகளில் கார்த்தி அசத்தியுள்ளார். ஆக்‌ஷன் நாயகி போல ஜோதிகா குதிரை ஓட்டும் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

படத்தில் காணாமல் போன தம்பியை தேடும் அக்கா பார்வதியாக ஜோதிகா சிறப்பாக நடித்துள்ளார். அக்காவிற்கு எதையும் செய்யும் பாசக்கார தம்பியாக கார்த்தி, சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டீசரில் ஜோதிகா கூறியுள்ள "அன்பு எல்லாத்தையும் மாத்தும் சரவணா" என்ற வசனம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. படத்தை டிசம்பர் 20ம் தேதி வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.