இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து துணை நடிகையின் காதலர், ’அந்தப் பெண் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டதால் திட்டினேன். இதனால் அவர்  தற்கொலை செய்துகொண்டார்’ என  பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மேரி ஷீலா ஜெபராணி (எ) யாஷிகா (21). கடந்த 6 மாதங்களுக்கு முன் சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்தார். வடபழனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கி சினிமா வாய்ப்பு தேடிவந்தார். ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு சின்னத்திரையில் யாஷிகா சிறு வேடங்களில் நடித்து வந்தார்.  செல்போன் ரீசார்ஜ் செய்ய விடுதியின் அருகே உள்ள செல்போன் கடைக்கு யாஷிகா அடிக்கடி செல்வார். அப்போது கடையில் வேலை பார்க்கும் பெரம்பூர் மார்க்கெட் தெருவை சேர்ந்த மோகன் பாபு (22) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம். அதுவரை கணவன்- மனைவி போல் வாழலாம் என்று மோகன்பாபு கூறியதால் இருவரும் கடந்த மாதம் பெரவள்ளுர் ஜி.கே.எம்.காலனி 22வது தெருவில் ஒரு வீட்டில் குடியேறினர். படப்பிடிப்புக்கு போகும்போது சில நாட்கள் இரவில் வரமுடியாமல், அதிகாலை யாஷிகா வீட்டுக்கு வந்துள்ளார். மோகன்பாபுவுக்கு இது பிடிக்காததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோகன் பாபு வீட்டுக்கு வருவதை தவிர்த்துள்ளார்.  இதை தொடர்ந்து, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என யாஷிகா கூறி உள்ளார். அதற்கு மோகன்பாபு ஒத்துக்கொள்ளவில்லை. தகராறு ஏற்பட்டதால் யாஷிகாவை விட்டு பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு மோகன்பாபு சென்றுவிட்டார். காதலனின் இந்த முடிவால் மனமுடைந்த யாஷிகா, இரு தினங்களுக்கு முன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து, பெரவள்ளுர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து யாஷிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் யாஷிகாவின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது யாஷிகா தற்கொலைக்கு முன்பு தனது தாய்க்கு உருக்கமாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பிய பதிவு கிடைத்தது. அதில், ‘சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்த எனக்கு உதவி செய்வதுபோல் நடித்து மோகன்பாபு என்னை ஏமாற்றிவிட்டார். எனக்கு திருமண ஆசை காட்டினார். அதை நம்பி மோகன்பாபுவுடன் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தினேன். பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று பேச்சு எடுத்தாலே என் மீது வெறுப்பை கொட்டினார். கடைசியாக திருமணம் செய்து கொள்ளாமல் என்னை ஏமாற்றிவிட்டார். எனது தற்கொலைக்கு மோகன்பாபுதான் காரணம். 

அவருக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். என்னைப் போல் யாரும் மோகன் பாபுவிடம் ஏமாறக்கூடாது. என்னுடைய சாவு காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும்’ என கூறப்பட்டிருந்தது. துணை நடிகையின் தாயும் வீடியோ ஆதாரத்துடன் போலீசாரிடம் மோகன் பாபு மீது புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்பாபுவை நேற்று முன்தினம் இரவு கைது செய்து விசாரித்தனர்.

அப்போது, மோகன்பாபு போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்...’வடபழனியில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்தேன். அப்போது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய வந்த யாஷிகாவுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகினோம். பின்னர் காதலாக மாறியது. அதன்பிறகு இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். 

இரு வீட்டிலும் சம்மதம் வாங்கிய பிறகு திருமணம் செய்துகொள்ளலாம் என நினைத்தோம். அதுவரை தனி வீடு எடுத்து தங்கலாமென முடிவு செய்தோம். அதன்படி, பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியில் தனி வீடு எடுத்து தங்கியிருந்தோம். சினிமாவில் நடிக்கும் ஆசையில் யாஷிகா அடிக்கடி வெளியில் சென்றுவிட்டு வருவார். மேலும் ஆடம்பரமாக இருப்பாள். போதிய வருமானம் இல்லாததால் செலவை குறைத்துக்கொள்ளும்படி அடிக்கடி கூறுவேன். அவள் எதையுமே காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்தாள். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படும். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதால் கோபத்தில் என்னுடைய தாய் வீட்டுக்கு சென்றுவிட்டேன். யாஷிகா தற்கொலை செய்துகொள்வாள் என கொஞ்சம்கூட நினைத்து பார்க்கவில்லை. இவ்வாறு போலீசில் மோகன்பாபு வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், போலீசார் மோகன்பாபுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்சிறையில் அடைத்தனர்.