சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான நடிகர் விஷாலுக்கு நீதிபதி சரியான நோஸ்கட் கொடுத்தார்.கடந்த சம்மனுக்கு ஏன் ஆஜராகவில்லை என்று நீதிபதி மலர்மதி தமிழில் கேட்ட கேள்விக்கு விஷால் ஆங்கிலத்தில் பதிலளிக்கத் துவங்கவே, ‘ஏன் பதிலை தமிழ்லயே சொல்லலாமே?’என்று விஷாலை வெளுத்து வாங்கினார் நீதிபதி.

சென்னை வடபழனியில், நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி எனும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஊழியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்பட்ட ஊதியத்தில், பிடித்தம் செய்யப்பட்ட வரியை, வருமான வரித்துறைக்கு நடிகர் விஷால் முறையாக செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவர் பதில் அளிக்காததால் வருமான வரித்துறை சார்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுபோக கடந்த 2016-ம் ஆண்டு, சேவை வரித்துறையினர் நடிகர் விஷாலின் அலுவலகத்தில் சோதனை செய்தபோது அவர் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடந்த 2 ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நடிகர் விஷாலுக்கு சம்மன் அனுப்பியது. விஷாலுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் ஆஜரான நிலையில், விஷாலுக்கு நேரில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதற்கு வருமான வரித்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், விஷாலுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணை  ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி மலர்மதி முன்பு இன்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். அப்போது ’கடந்த சம்மனுக்கு ஏன் ஆஜராகவில்லை?’ என்று நீதிபதி மலர்மதி தமிழில் கேட்ட கேள்விக்கு விஷால் ஆங்கிலத்தில் பதிலளிக்கத் துவங்கவே, ‘ஏன் பதிலை தமிழ்லயே சொல்லலாமே?’என்று விஷாலிடம் நீதிபதி கடுமை காட்டியதாகத் தெரிகிறது.