தமிழில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கவுதம் மேனன். இயக்கம், தயாரிப்பு என நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவரது திரை வாழ்க்கையில், திடீரென பிரச்னைகள் சூழ கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார். 

அதற்கான காரணங்களில் ஒன்று தனுஷை வைத்து அவர் இயக்கிய 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம். கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இந்தப் படத்தை, கடன் பிரச்னைகளால் திட்டமிட்டபடி  ரிலீஸ் செய்ய முடியாமல் கவுதம் மேனன் தவித்துக்கொண்டிருந்தார். 

ஒருவழியாக, பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் மூலம் அவருக்கு விடிவுகாலம் பிறந்தது. வரவே வராது என முடிவு செய்யப்பட்ட 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தை, ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம், வரும் நவம்பர் 29ம் தேதி திரைக்கு வருகிறது.


ஐசரி கணேஷ் செய்த கைமாறுக்கு பிரதிபலனாக அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படத்தை இயக்கித்தர ஒப்புக்கொண்ட கவுதம் மேனன், 'ஜோஷ்வா இமை போல் காக்க' என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டு அசரடித்தார். 

அத்துடன், 2020ம் ஆண்டு காதலர் தின கொண்டாட்டமாக இந்தப் படம் வெளியாகும் என்று அறிவித்தும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கவுதம் மேனன் ஸ்டைலில், பக்கா ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில், வருண் ஹீரோவாக நடிக்கிறார். இவர், 'பப்பி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். 

ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் செகண்ட் லுக் வெளியாகி டுவிட்டரில் டிரெண்டிங் ஆகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக வருண் நிற்கும் இந்த போஸ்டர், இணையத்தில் வைரலாகிவருவதுடன் ரசிகர்களின் லைக்சையும் அள்ளி வருகிறது.

கடந்த நவம்பர் 2ம் தேதி 'ஜோஷ்வா இமைபோல் காக்க' படத்தின் அறிவிப்புடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு, அடுத்த 21-வது நாளில் செகண்ட் லுக் வெளியீடு என நீண்ட காலத்திற்குப் பிறகு ஃபுல் ஃபார்முக்கு திரும்பியிருக்கும் கவுதம் மேனனின் வேகத்தை பார்த்து திரையுலகினர் மட்டுமல்ல ரசிகர்களும் வாயடைத்துப் போயுள்ளனர்.