’தனி ஒருவன்’படத்துக்குப் பிறகு கொஞ்சம் உஷாராகக் கதை கேட்கிறார் என்று சொல்லப்பட்ட ஜெயம் ரவியின் ‘கோமாளி’ரஜினி ட்ரெயிலர்  சர்ச்சைகளால் கொஞ்சம் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருந்தது உண்மை. ஆனால்...வழக்கம்போல் டீஸர்,ட்ரெயிலர்களால் ஏமாந்த கதைதான் இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறது.

2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவன் ஜெயம் ரவிக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது.பதினாறு ஆண்டுகளில் நாட்டில் நடந்துள்ள மாற்றங்களும் அதனால் அவ்விளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படம்.படத்தின் தொடக்கத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வருகிறார் ஜெயம்ரவி. அதற்காக கடுமையாக உழைத்து உடல் இளைத்திருக்கிறார். ஆனாலும் மாணவன் வேடத்துக்கு அவர் பொருத்தமாக இல்லை.கோமா நிலையிலிருந்து வெளியே வந்ததும், நாட்டில் நடந்துள்ள மாற்றங்களை அவர் எதிர்கொள்ளும் விதம்  
ஓரளவு சுவாரசியமாக இருக்கிறது.

முன்னாள் காதலியைத் தேடிச் செல்வது உள்ளிட்ட பல காட்சிகள் லேசாக கிச்சுக்கிச்சு மூட்டுகின்றன. நவீனத்தை எதிர்கொள்ளத் தடுமாறும் இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக நடித்து பலம் சேர்த்திருக்கிறார் ஜெயம்ரவி. ஆனால் 16 வருடங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாத நடிப்பு. சம்யுக்தா ஹெக்டே, காஜல் அகர்வால் ஆகிய இரண்டு நாயகிகள். இருவருமே ஊறுகாய் அளவுக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இன்னொரு நாயகன் போல படம் முழுக்க வருகிறார் யோகிபாபு. மென்பொருள்துறை பணியாளர் வேடத்துக்குப் பொருத்தமாக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார். அங்கங்கே சிரிக்க வைத்து படத்தை இலகுவாக்குகிறார்.ஆனால் படம் முழுக்க அவரைத் திணித்திருப்பது கொஞ்சம் சலிப்பைத் தருகிறது.அவர் மனைவியாக வருகிற ஆனந்தி, நன்றாக நடித்து கவனிக்க வைக்கிறார்.முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், கதையின் திருப்பத்துக்குப் பயன்படுகிறார்.மருத்துவராக நடித்திருக்கும் ஷாரா வரும் காட்சிகள் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு ஓகே ரகம். ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் பாடல்கள் தலையெழுத்தே என்று கேட்டுத் தொலைத்தே ஆகவேண்டிய  ரகம்.இந்தி படிக்கலாம், இனமில்லை மொழியில்லை என்பது உட்பட தமிழர்களின் உணர்வுகளைச் சீண்டும் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. நவீன மயங்களால் நடந்துள்ள மாற்றங்கள் மனித குலத்துக்கு எதிராகப் போய்க்கொண்டிருப்பதைச் சொல்லும் வகையில் கதை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். கொஞ்சம் முன்னேறி எட்டு ஸ்டெப் எடுத்து வைத்த ஜெயம் ரவியை 4 ஸ்டெப் பின்னோக்கி இழுத்திருக்கும் படம் கோமாளி. மொத்தத்தில் ஒரு காமா சோமா கோமா படம் இது.