‘வாழ்க்கையில் யாரும் சந்திக்காத பல நெருக்கடியான காலகட்டங்களைச் சந்தித்தபோது தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறேன்’ என்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறார் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘சலங்கை ஒலி’ போன்ற காவியங்களின் நாயகி ஜெயப்ரதா.

1974ல் ‘பூமி கோசம்’ என்ற தெலுங்குப் படத்தின் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்த ஜெயப்ரதா சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ்,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நம்பர் ஒன் நடிகையாகத் திகழ்ந்து வந்தார். தமிழில் டப் ஆகி வந்த ‘சலங்கை ஒலி’ படத்துக்கும் பாலசந்தர் இயக்கத்தில் இவர் நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கும் இன்றுவரை இவருக்கு தீவிர ரசிகர்கள் உண்டு.

தெலுங்கில் பிசியாக இருந்தபோது தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்த ஜெயப்ரதா, பின்னர் அமர்சிங் பொதுச் செயலாளராக இருந்த சமாஜ்வாடி கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகவும் ஆனார். அந்த சமயத்தில் அமர் சிங் தனது தனது காட் ஃபாதர் என்று எத்தனை தடவை சொல்லியும் ஏற்றுக்கொள்ளாத அரசியல் உலகம் அவர்கள் இருவரையும் இணைத்து நிறைய கிசிகிசுக்களை கிளப்பியது.

அதுகுறித்துமும்பயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நினைவுகூர்ந்த ஜெயப்ரதா, ‘அவர் எனது அண்ணன் என்று சொல்லி கையில் ராக்கி கட்டியிருந்தால் கூட இந்த உலகம் எங்கள் உறவை நம்பியிருக்காது. என்னையும் அவரையும் இணைத்து மார்பிங் செய்யப்பட்ட படங்கள் வந்துகொண்டே இருந்தன. இத்தனைக்கும் அந்த சமயத்தில் அவர் டயாலிசிசில் இருந்தார். அந்த வதந்திகளால் எனக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது. எந்த நிமிடம் நான் தற்கொலை செய்துகொள்வேன் என்று எனக்கே தெரியாது என என் அம்மாவிடம் தினமும் சொல்லிக்கொண்டே இருந்தேன்’ என்று அந்த கசப்பான நினைவுகளை அசைபோடுகிறார் ஜெயப்ரதா.