காஞ்சிப் பட்டுடுத்தி, அழகிய தமிழ்ப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு, இட்லி,சாம்பார், தயிர்ச்சாதம் போன்ற தென்னிந்திய உணவு வகைப் பரிமாறலுடன் எனது திருமணம் மிக மிக எளிமையாக திருப்பதியில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறேன்’என்கிறார் நடிகை ஸ்ரீதேவியின் செல்லப்பெண் ஜான்வி கபூர். மாப்பிள்ளை? கொஞ்சம் பொறுங்க பாஸ்...

22 வயதுதான் ஆகிறது. இரண்டாவது படமே நடித்து முடிக்கவில்லை. அதற்குள் திருமணம் குறித்துப் பேசுகிறாரே ஸ்ரீதேவி மகள் என்று ஆச்சரியப்பட வேண்டாம். அவரது இந்த ஆசை இன்னும் மூன்று வருடங்களுக்குப் பின்னர் நடக்கவிருக்கும் திருமணம் குறித்த ஆசைதான். சமீபத்தில் ஒரு பிரபல வட இந்திய இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தனது கனவுத் திருமணம் குறித்து பேட்டி அளித்த போது அவ்வாறு தெரிவித்த அவர், தனது வருங்காலக் கணவர் எப்படி இருக்கவேண்டும் என்கிற கேள்விக்கு பதில் அளிக்கையில்,’அவர் தனது திறமை மீது அபார நம்பிக்கை கொண்டவராகவும், தான் நேசிக்கும் காரியங்களில் மட்டும் கவனம் செலுத்துபவராகவும் இருக்கவேண்டும். அவருக்கு நகைச்சுவை உணர்வு இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக என்னைக் கண்மூடித்தனமாகக் காதலிப்பவராகவும் இருக்கவேண்டும்’என்று ஏகப்பட்ட ‘டும்’களை நிபந்தனையாக வைக்கிறார்.

தனது படங்களைத் தேர்வு செய்வதில் மிக நிதானமாக இருக்கும் ஜான்வி கபூரின் இரண்டாவது படம், அவர் கார்கில் பைலட்டாக நடித்திருக்கும் ’கஞ்சன் சக்ஸேனா’அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரிலீஸாகிறது. தமிழில் அப்பாவின் தயாரிப்பில் அஜீத் நடிக்கும் ‘தல 60’படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது குறித்து எந்தப் பேட்டியிலும் மூச் விடுவதில்லை ஜான்வி கபூர்.