கடந்த 16ம் தேதி மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அப்போது, காளைகளை கழற்றிவிட்ட சிலர் மீது, போலீசார் தடியடி நடத்தினர். மேலும், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 250க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் திரண்டு ஆங்காங்கே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தக்கோரியும், பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வலியுறுத்தியும், மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து பல மாவட்டங்களில் மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் தொடங்கிய போராட்டம் இதுவரை முடிவுக்கு வரவில்லை. போராட்ட மாணவர்களுடன், அரசு சார்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே, போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுர்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் டி.ராஜேந்தர், மயில்சாமி, விக்ரம், மன்சூர் அலிகான், சிவகார்த்திகேயன், விஜய், சிவகுமார், சூர்யா உள்பட ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அறப்போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் நடிகர் லாரன்ஸ் மெரினா கடற்கரைக்கு சென்றார். அப்போது, தமிழகம் முழுவதும், குடிக்க தண்ணிர், உண்ண உணவு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, உணவு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடி தருவதாக அறிவித்தார்.

மேலும், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் தேர்தலில், பின் விளைவை சந்திக்க நேரிடும் என கூறி சென்றார். இதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும், தனது சொந்த சொலவில் உணவு பொருட்கள் வழங்கினார்.

தமிழ் திரையில் முன்னிலையில் உள்ள நடிகர்கள், மாஸ் ஹீரோக்கள் தங்களது பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், தனி வீடியோ பதிவிலும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், யாரும் நேரில் சென்று எவ்வித ஆறுதலும், ஆதரவு கூறவில்லை.

ஆனால் நடிகர் லாரன்ஸ், போராட்டம் நடத்தும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, தனது சொந்த செலவில் போராட்டம் நடத்துபவர்கள் சோர்ந்த போக கூடாது என்பதற்காக உணவு வழங்கியது அனைவரையும் நெகிழ செய்தது.