இந்தப் பட்டியலில் ஜெய்பீம், மாஸ்டர், கர்ணன் என 3 தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. இதில் ‘ஜெய்பீம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்ற போதும், அதே அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது.
இந்தியாவில் 2021-ஆம் ஆண்டில் வெளியான படங்களின் பட்டியலில் தமிழில் வெளியான ‘ஜெய்பீம்’ படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலக அளவில் படங்களை தர மதிப்பீடு செய்து, படங்களைப் பட்டியலிடுகிறது IMDb. அதன்படி 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியான படங்களில் டாப் 10 இடங்களுக்குள் வந்த பிரபலமான படங்களின் பட்டியலை IMDb வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தமிழில் வெளியான ‘ஜெய்பீம்’ படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை ‘ஷெர்ஷா’, மூன்றாம் இடத்தை ’சூர்யவன்ஷி’, நான்காம் இடத்தை ‘மாஸ்டர்’, ஐந்தாம் இடத்தை ‘சர்தார் உத்தம்’, ஆறாம் இடத்தை ‘மிமி’, ஏழாம் இடத்தை ‘கர்ணன்’, எட்டாம் இடத்தை ’சித்தத்’, ஒன்பதாம் இடத்தை ‘த்ரிஷ்யம்’, பத்தாம் இடத்தை ‘ஹஸீன் தில்ருபா’ ஆகிய படங்கள் பிடித்துள்ளன.
இந்தப் பட்டியலில் 'ஜெய்பீம்', 'மாஸ்டர்', 'கர்ணன்' என 3 தமிழ் படங்கள் இடம் பிடித்துள்ளன. இதில் ‘ஜெய்பீம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்ற போதும், அதே அளவுக்கு சர்ச்சைகளையும் சந்தித்தது. இப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி, பெயர் போன்றவை பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இப்படத்துக்கு எதிராக பாமகவினரும் வன்னிய அமைப்புகளும் வரிந்துக்கட்டிக் கொண்டு வந்தன. அதன் உச்சக்கட்டமாக ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருதுகள் எதுவும் தரக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வன்னியர் சங்கம் கடிதம் எழுதியது.
ஆனால், அதையும் மீறி ‘ஜெய்பீம்’ படம் உலக அளவில் ஈர்த்துள்ளது. அண்மையில் கோல்டன் குளோப் என்ற சர்வதேச விருதுக்கு ‘ஜெய்பீம்’ படம் தேர்வானது. இந்நிலையில் தற்போது IMDb பட்டியலில் இந்தியாவில் முதலிடம் பிடித்துள்ளது ‘ஜெய்பீம்’. இதேபோல IMDb உலக அளவிலான படங்களின் தர மதிப்பீட்டில் 8.6 புள்ளிகள் பெற்று ‘ஜெய்பீம்’ முதலிடம் பிடித்தது. 1994-ஆம் ஆண்டிலிருந்து உலகப் பட்டியலில் முதலிடத்திலிருந்த ஹாலிவுட் படத்தை ‘ஜெய்பீம்’ பின்னுக்குத் தள்ளியதும் குறிப்பிடத்தக்கது.
