தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதுவும் இல்லாத காலத்திலேயே மாயாஜாலம் மற்றும் பேய் படங்களை எடுத்து மக்கள் மனதில் நிலைத்திருப்பவர் இயக்குனர் விட்டலாச்சாரியா. அவர் குறித்த சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
விட்டலாச்சார்யாவின் ஆரம்பகால வாழ்க்கை
கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள உதயவாரா என்ற கிராமத்தில் பிறந்தவர் விட்டலாச்சாரியா. பள்ளிக் கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு பின்னர் சிறு சிறு வேலைகள் பார்த்து வந்தார். பின்னர் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வந்த அவர், வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை அனுபவித்தார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ‘டூரிங் சினிமா’ என்கிற சினிமா கொட்டகையை நடத்தி வந்தார். அங்கு வெளியிடப்படும் படங்களை பார்த்து திரைப்பட உத்திகளை கற்றுத் தேர்ந்தார்.
திரைத்துறைக்குள் வந்த விட்டலாச்சார்யா
1946-ம் ஆண்டு தனது முதல் பட தயாரிப்பை தொடங்கினார். 1952-ம் ஆண்டு தனது முதல் படமான ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம் என்கிற படத்தை கன்னட மொழியில் இயக்கினார். அதன் பின்னர் 1954-ல் கருப்பாக இருக்கும் பெண்ணுக்கு நேரிடும் பிரச்சனைகள் குறித்து புரட்சிகரமான கதையை ‘கன்யாதானம்’ என்கிற பெயரில் எடுத்திருந்தார். தொடர்ந்து படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்த அவர், என்.டி ராமராவை வைத்து அதிகபட்சமாக 19 படங்களை இயக்கியிருக்கிறார்.
விட்டலாச்சார்யா எடுத்த வெற்றிப் படங்கள்
ஜெகன் மோகினி, நவ மோகினி, மோகினி சபதம், மதன மந்திரி, வீரபிரதாபன், சிஐடி ராஜூ போன்றவை எல்லாம் இவர் இயக்கிய வெற்றிப் படங்களாகும். இவர் பூர்வீகம் கன்னடம் என்ற போதிலும் பெரும்பாலும் தெலுங்கு மொழியிலேயே படம் இயக்கி வந்தார். அவை தமிழிலும் கன்னடத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. ஆரம்பத்தில் சமூகப் புரட்சி மற்றும் குடும்பம் சார்ந்த கதைகளை எடுத்து வந்த அவர், பின்னாளில் பேய்ப் படங்கள் மற்றும் மாயாஜாலப் படங்கள் பக்கம் தனது கவனத்தை திருப்பினார். இது அவருக்கு வெற்றியும் பெற்றுக் கொடுத்தது.
விட்டலாச்சார்யாவின் வெற்றியின் ரகசியம்
மாயாஜாலம் மற்றும் பேய் படங்கள் எடுப்பது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்ட அவர், “எக்ஸார்சிஸ்ட், ஓமன் முதலான படங்களில் வந்த பேய்களைப் பார்த்து மக்கள் பயந்து நடுங்கினர். ஆனால் தன் படங்களில் வரும் பேய்கள் மக்களை சிரிக்க வைக்கின்றன. மாயாஜால காட்சிகளுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு இருக்கிறது. கற்பனைக்கு எட்டாத அற்புதங்களை காணும் வாய்ப்பு மக்களுக்கு என் படம் மூலம் கிடைக்கிறது. அந்த புதிய அம்சங்களை அவர்கள் விரும்புகிறார்கள். அதுவே எனக்கு வெற்றியாக அமைகிறது” எனக் கூறினார்
கவர்ச்சி நடனங்களுக்கு முக்கியத்துவம் ஏன்?
மேலும், “தன் படங்களில் கவர்ச்சி நடனங்கள் நிச்சயம் இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதனால் அவர்களை நான் ஏமாற்றுவதில்லை. கண்டிப்பாக என் படங்களில் கவர்ச்சி நடனம் இருக்கும். ஆரம்பத்தில் ஜோதிலட்சுமியுடன் ஜெயமாலினியும் ஷூட்டிங் வருவார். அவரைப் பார்த்ததும் நம் படங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தீர்மானித்தேன். அவருடைய உடல் அமைப்பும், வசீகரமாக அமைந்து விட்டதால் கவர்ச்சி நடனங்களுக்கு பொருத்தமானவராக மாறிவிட்டார்” என ஜெயமாலினியை தன் படங்களில் பயன்படுத்தியது குறித்து விட்டலாச்சார்யா விளக்கினார்.
மாயாஜால காட்சிகளை உருவாக்கியது எப்படி?
மாயாஜால காட்சிகளை யோசிப்பதற்கு சுமார் பத்து பேர் கொண்ட குழுவை வைத்திருக்கிறேன். அவர்களின் மூன்று பேர் தினமும் ஏதாவது ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் அவர்களின் வேலை. படம் பார்த்துவிட்டு எந்த காட்சியை மக்கள் ரசித்தார்கள் என என்னிடம் விவரிக்க வேண்டும். அதை அடிப்படையாக வைத்து என் கற்பனையில் அதை விரிவுபடுத்தி மாயாஜால காட்சிகளை கற்பனை செய்து சொல்வேன் அதற்கு கலை இயக்குனர் உரு கொடுப்பார். யாராவது காட்சி அமைப்பை சரியாக வரவில்லை என்று கூறினால் அதை அப்படியே விட்டுவிடுவோம். நாங்கள் இதை குழுவாக இணைந்து டீம் ஒர்க்காக செய்தோம் என தனது வெற்றியின் ரகசியங்களை விட்டலாச்சார்யா பகிர்ந்து கொண்டார்.
ஒரு காட்சிக்காக மிகவும் சிரமப்பட்டுள்ள விட்டலாச்சார்யா
நடன கலைஞர்களை மட்டுமல்ல நடிகர்களையும் கடுமையாக வேலை வாங்கும் பழக்கம் கொண்டவர் விட்டலாச்சாரியா. ‘வீரத்திலகம்’ படத்தில் நடித்த காந்தா ராவை இரண்டு நாட்கள் ஒரே இடத்தில் கட்டி போட்டு வேலை வாங்கி இருக்கிறார். அவருடைய ஷூவை பிடித்துக் கொண்டு இரு சிறிய உருவங்கள் சண்டை போடுவது போலவும், அவர் தலைமுடியைப் பிடித்து தொங்கியபடி காதில் ஒரு குள்ள உருவம் ரகசியம் சொல்வது போன்ற காட்சிகள் படம் பிடிக்க வேண்டியது இருந்தது. அவர் கொஞ்சம் நகர்ந்தாலும் காரியம் கெட்டுவிடும். எனவே அவரை கட்டிப்போட்ட நிலையிலேயே சாப்பாடு, தண்ணீர், இயற்கை உபாதைகள் கழிக்க வைத்து அந்த காட்சியை எடுத்துள்ளார் விட்டலாச்சார்யா.
லைட் மேன் சொல்லும் ஐடியாக்களையும் கேட்பாராம்
ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து விடும் வழக்கத்தைக் கொண்ட விட்டலாச்சாரியா. லைட் பாயிடம் யோசனை கேட்பாராம். அவர் சொல்லும் யோசனையை கேமரா மேன் ஆர்ட் டைரக்டருடன் கலந்து ஆலோசித்து, அதை உடனடியாக செயல்படுத்துவாராம். லைட் மேன் நிறைய காட்சிகளை பார்த்திருப்பார், விதவிதமான காட்சிகள் படமாக்கப்படுவதை உன்னிப்பாக கவனித்து இருப்பார், நிறைய இயக்குனர்களை பார்த்திருப்பார் எனவே அவர் கூறும் அந்த அனுபவ அடிப்படையிலான யோசனையை பெரும்பாலும் ஏற்றுக்கொள்ள தக்கவையாக இருக்கும். எனவே லைட் பாய் கூறுவதை அலட்சியப்படுத்தாமல் விட்டலாச்சாரியா கேட்பது வழக்கமாம்.
விட்டலாச்சார்யா புகழ் என்றைக்கும் நிலைத்து இருக்கும்
தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் எத்தனையோ படங்கள் வருகின்றன. ஆனால் அவற்றில் பல ரசிக்கும் படியாக இல்லை. தொழில்நுட்ப வளர்ச்சிகள் எதுவும் இல்லாத காலத்திலேயே நம் கற்பனைக்கு எட்டாத மாயாஜால படங்களையும், பேய்ப் படங்களையும் திரை உலகிற்கு கொடுத்தவர் விட்டலாச்சாரியா. ஜாலியான பேய் படங்களை பார்க்க விரும்பினால் விட்டலாச்சாரியா படங்களை பார்க்கலாம். எத்தனை தசாப்தங்கள் கடந்தாலும் அவரது படங்களும், விட்டலாச்சார்யாவின் புகழும் நீடித்து நிலைத்திருக்கும்.
