‘ஹரஹர மகாதேவகி’,’இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ வகையறாப் படங்களின் ஒன்று விட்ட தம்பி இந்த ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’.பெண்கள், குழந்தைகள் யாருமே தியேட்டர் இருக்கிற திசைக்கே வரவேண்டியதில்லை. வாலிப வயோதிக அன்பர்கள் மட்டும் ஆதரித்தால் போதும் என்ற உயர்ந்த எண்ணத்தில் எடுக்கப்பட்டுள்ள படம்.

விமலும் சிங்கப்புலியும் ஒரு மெடிக்கல் ஷாப்பில் பணிபுரிந்துகொண்டே இருட்டுநேரத் திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். அது ஒரு முரட்டுத் திருட்டு அல்ல. சின்னச் சின்ன சாமான்களைத் திருடி தெருவோரங்களில் விற்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஒருமுறை இன்ஸ்பெக்டர் மன்சூர் அலிகானின் வீடு மற்றும் சின்ன வீட்டில் தலா 5 லட்சம் திருடிவிட, எடுப்பான யூனிஃபார்மில் வரும்  டார்லிங் பூர்ணா தலைமையில் போலீஸ் அவர்களைத் துரத்துகிறது.

இன்னொரு பக்கம் ஒரு சின்ன பொடி டப்பா சைஸில் உள்ள போதைப்பொருளைப் பறிகொடுத்த கும்பலும் இவர்களைத் துரத்த, மூன்றாவது திசையில் விமலுடன் ஓடிப்போகும் மகள் ஆஸ்னா ஜவேரியை மீட்க விருமாண்டி கோஷ்டி விரட்டுகிறது. அதையும் தாண்டிய இன்னொரு திசையில் லண்டன் காமுகி தன் தங்கையுடன் விமலைத்தேடித் துரத்துகிறார்.

கதை ஒண்ணுமே புரியலையே பாஸ் என்ற சலிப்பு வந்திருக்கும். இந்தப் படத்தின் மேட்டர் கதையில் இல்லை பாஸ். காமெடியில் ஒரு எழுத்தை எக்ஸ்ட்ராவாகச் சேர்த்தால் வருமே காமநெடி. அந்த வகையறா சமாச்சாரம் இது.

விமெல் தான் தங்கியிருக்கும் போர்சனில் உள்ள ஒரு அக்காவுடன் பல காட்சிகளில் உல்லாசமாக இருக்கிறார். அது எனக்கும் தெரியும் என்றபடி, அவரது தங்கை முறையாக வரும் ஆஸ்னா ஜவேரி விமலுடன் காதல் சவாரி செய்கிறார். ஒரு லண்டன் ஃப்ளாஷ்பேக்கில் ஆண்களைக் கதறக் கதறக் கற்பழிக்கும் ஒரு பெண் வருகிறாள். பாடல்காட்சிகளில் ஆஸ்னா ஜவேரி காஷ்ட்யூம் சமாச்சாரத்தில் ஷகீலாவுக்கு சவால் விடுகிறார்.

சென்சாரில் சுமார் 50 இடங்களிலாவது சவுண்ட் மியூட் செய்யப்பட்டதையும் மீறி, வசனங்களில் ’உங்க அக்காளும் நீயும் எப்பப்பாரு யாரையாவது போடுறதுலயே இருக்கீங்க’ என்ற பிரபலமான வசனம் தொடங்கி ஆபாசத்தை அள்ளித்தெளித்திருக்கிறார்கள்.

படத்தை ஏ.ஆர்.முகேஷ் என்ற புண்ணியவான் இயக்கியிருக்கிறார். விமர்சனங்களில் பாராட்டுகள் எதையும் எதிர்பார்த்து அவர் படம் இயக்கவில்லை என்பது ‘அப்பா கழுவி விடுப்பா’ என்று  முதல் ஷாட்டிலேயே சின்னப்பையன் ஒருவன் அம்மணக்குண்டியோடு முக்கால் ஸ்கிரீனை முழுங்கி  நிற்கும்போதே தெளிவாக வெளங்கிவிடுகிறது.

குறிப்பாக சொல்வதென்றால் கதையை அல்ல சதையை மட்டும் நம்பி எடுக்கப்படுள்ள படம்.