’தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அஜீத் அதற்குத் தகுதியான அத்தனை நல்ல குணங்களும் கொண்டவர். அவரை நான் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்’என்று பாலிவுட் நாயகி ஐஸ்வர்யா ராய் ‘தல’க்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு தனியார் நிறுவனத்தின் கிளையை தொடங்கி வைப்பதற்காக இன்று  சென்னை வந்தார். தொடக்க விழாவுக்கு பின்னர்  நிருபர்கள் மத்தியில் அவர் ,’மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நானும் நடிக்க இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொள்கிறேன். அவருடைய புதிய பயணத்தில் நானும் இருக்கிறேன். மணி ரத்னம் உருவாக்கும் எந்த ஒரு படைப்பிலும் அங்கமாக இருப்பது எனக்கு பெருமையாகும்.

படத்தை பற்றி இப்போது பேசுவது நியாயமாக இருக்காது. மணிரத்னம் எனது குரு. எனது முதல் படமான ’இருவர்’ அவருடன்தான் தொடங்கியது. எங்களது தொழில் உறவில் அவ்வளவு பரிச்சயம் இருந்தாலும், படம் பற்றிய தகவல்களை அவர் எப்போது விரும்புகிறாரோ அப்போது அவரே உலகத்திற்கு சொல்வார்.

அஜித் ஒரு அற்புதமான நடிகர். அவரது வெற்றியும், ரசிகர்களிடமிருந்து அவருக்கு கிடைக்கும் அன்பும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் அவர்  இதற்கெல்லாம் தகுதியானவர்தான்.’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பின்போது சில முறை  அவரை சந்தித்திருக்கிறேன். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அவரது வெற்றிக்காக பாராட்டுகளை தெரிவிக்க விரும்புகிறேன்’என்று உற்சாகப் பேசினார் ஐஸ்வர்யா ராய்.