தொட்டதெல்லாம் ஹிட்டு; ராஜாவுக்கு கொட்டிய துட்டு! இளையராஜா சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Ilaiyaraaja Net Worth : தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜாவின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இளையராஜா, 1970-களில் இருந்து இசையால் தமிழ் சினிமாவை ஆண்டு வருகிறார். இவரின் ஆரம்ப காலகட்டம் சவால் நிறைந்ததாகவே இருந்தது. ஏனெனில் 1960 முதல் 1970 வரை எம்.எஸ்.வி மற்றும் கேவி மகாதேவன் ஆகியோர் இசையுலகில் கோலோச்சி இருந்தனர். நாளடைவில் எம்.எஸ்.வி-யின் இசை ஒரே மாதிரி இருப்பதாக கூறி நாளடைவில் மக்கள் மத்தியில் அவரது இசைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மவுசு குறைய ஆரம்பித்தது.
அந்த சமயத்தில் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்த இளையராஜாவுக்கு, இலவசமாக அனைத்து இசைக்கருவிகளையும் வாசிக்க பயிற்சி அளித்துள்ளார் தன்ராஜ் மாஸ்டர். பின்னர் இசையமைப்பாளர் சலீல் செளத்ரியிடம் வாத்தியக் கலைஞராக வேலை செய்த இளையராஜா அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இசையைக் கற்றுக்கொண்டு இசையமைப்பாளர் ஜிகே வெங்கடேஷிடம் கம்போசிங் அசிஸ்டண்டாக பணியாற்றினார்.
இளையராஜாவின் திறமையை பார்த்து வியந்த பஞ்சு அருணாச்சலம், கடந்த 1976-ம் ஆண்டு தான் தயாரித்த அன்னக்கிளி படத்தில் அவரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். பாவலர் பிரதர்ஸ் என தன் பெயரை அன்னக்கிளி பட டைட்டில் கார்டில் போடச்சொன்ன ராஜாவுக்கு, இது பழைய பெயராக இருக்கிறது. உனக்கு புது பெயர் வைக்கிறேன் என பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயர் தான் இளையராஜா.
இதையும் படியுங்கள்... தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த இளையராஜா பாடல் இந்த தமிழ் பாடலா?
அன்னக்கிளி படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு டிரெண்ட் செட்டராக மாறியது. அதற்கு முன்னர் வரை ஒரே மாதிரியான இசையை கேட்டுவந்த ரசிகர்களை தன்னுடைய திறமையால் ஈர்த்த இளையராஜா, 45 ஆண்டுகளாக அதே பெயரோடும் புகழோடும் நிலைத்திருக்க முக்கிய காரணம் அவரது இசை தான். இவர் படைத்த சாதனைகளும் ஏராளம்.
இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரு வருடத்தில் 56 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்கிற சாதனையை படைத்தவர் இளையராஜா. உலக புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் கிளாசிக்கல் கிட்டார் பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கி உள்ளார். சிம்பொனி இசையை உருவாக்க குறைந்தது ஆறு மாத காலங்கள் ஆகுமாம். ஆனால் ஆசியாவிலேயே சிம்பொனி இசையை 13 நாட்களில் இசையமைத்து முடித்தவர் இளையராஜா.
இப்படி அவரின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். தற்போது ராஜ்யசபா எம்.பி ஆக இருக்கும் இளையராஜாவின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம். அதன்படி அவரின் சொத்து மதிப்பு 150 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இவர் தற்போது ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் பண்ணைபுரத்தில் பங்களாக்களும் உள்ளன.
இதையும் படியுங்கள்... இளையராஜா வெளியேற்றம்; ஆண்டாள் கோவிலில் ஜீயர்கள் செயலால் வெடித்த சர்ச்சை!