மேக்கப் ஆர்டிஸ்ட் அஷ்மிதா கொடுத்த புகாரின் பேரில் யூடியூபர் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலமான விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.
Ashmitha Vishnu Issue
சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமானவராக வலம் வருபவர் மேக்கப் ஆர்டிஸ்ட் அஷ்மிதா. இவர் சொந்தமாக மேக்கப் அகாடமி ஒன்றை வைத்து பலருக்கும் மேக்கப் எப்படி போடுவது என்று கற்றுக் கொடுத்து வருகிறார். பிரபலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று மணமகள்களுக்கு மேக்கப் போட்டு அதை வீடியோவாக வெளியிட்டு பிரபலமானார். தமிழகத்தில் இருக்கும் மேக்கப் ஆர்டிஸ்ட்களில் இவர் மிகவும் காஸ்ட்லியானவர் எனக் கூறப்படுகிறது. இவரை சமூக வலைதளங்களில் ஏராளமானவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இவருக்கும் இவருடைய கணவர் விஷ்ணுவுக்கும் சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. விஷ்ணு ஏற்கனவே நிதி மோசடி மற்றும் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்.
பல சர்ச்சைகளில் சிக்கிய விஷ்ணுகுமார்
விஷ்ணுகுமார் அரசியல் நிகழ்வுகள் குறித்து பேசி வீடியோ வெளியிடுவது, நடனம் ஆடுவது என சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் குறித்து இவர் வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நண்பனின் சகோதரிக்கு பாலியில் தொல்லை கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கினார். நண்பனின் சகோதரிக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பியதும், அவரைப் பார்க்க நேரில் சென்ற போது நான்கைந்து பேர் அவரை மடக்கி விஷ்ணுவை தாக்கிய வீடியோ ஒன்றும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் தன் தரப்பு விளக்கங்களை விஷ்ணு கொடுத்து வந்தார்.
காவல் நிலையத்தில் அஷ்மிதா புகார்
ஆரம்பத்தில் அஷ்மிதா கணவருக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து விலகி விட்டதாக அறிவித்தார். அஷ்மிதா தற்போது மூன்றாவது குழந்தைக்கு தாயாகி உள்ளார். இந்த விஷயங்கள் அனைத்தும் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. தற்போது சமூக வலைத்தளங்களில் பேட்டியளித்து வரும் விஷ்ணு, அஷ்மிதா குறித்து தொடர்ந்து புகார்களை கூறி வந்தார். அஷ்மிதா ஏடிஜிபி ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் தப்பான படங்களில் நடித்தார் என்று விஷ்ணு பேட்டி அளித்திருந்தார். இந்த நிலையில் விஷ்ணு தன்னை பணம் கேட்டு மிரட்டி அடித்து துன்புறுத்துவதாக மகளிர் காவல் நிலையத்தில் அஷ்மிதா புகார் அளித்துள்ளார். அஷ்மிதாவின் புகாரை ஏற்றுக் கொண்ட போலீசார் விஷ்ணுவை கைது செய்துள்ளனர்.
யார் இந்த அஷ்மிதா?
கொலை மிரட்டல் விடுத்தது, பெண்ணை வன்கொடுமை செய்தது, நம்பிக்கை மோசடி, சமூக வலைதளங்களில் பெண்களை தவறாக சித்தரித்தது என்று நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அஷ்மிதா படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு, விஜேவாக பணியாற்றத் தொடங்கினர். மேக்கப் போடுவதில் ஆர்வம் இருந்ததன் காரணமாக தனக்கு தெரிந்தவர்கள், தோழிகள், மணமகள்களுக்கு மேக்கப் போட்டு பயிற்சி எடுத்துக் கொண்டார். பின்னர் பியூட்டி கோர்ஸ் முடித்த அவர் ‘அஷ்மிதா மேக்கப் அகாடமி’ என்கிற பெயரில் நிறுவனம் ஒன்றைத் தொடங்கி பலருக்கும் மேக்கப் பற்றி சொல்லிக் கொடுத்து வருகிறார். மேலும் அழகு சாதனப் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறார்.
கம்பி எண்ணும் விஷ்ணு குமார்
ஒரு ஆல்பத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அஷ்மிதாவுக்கும், விஷ்ணுவுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வீடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலாகின. இந்த நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட விவாகரத்து பெற்று பிரிந்தனர். மீண்டும் சில மாதங்களுக்குப் பின்னர் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு மீண்டும் இணைந்ததாக கூறினர். மேலும் ஒரு ஆல்பத்திலும் நடித்திருந்தனர். ஆல்பம் பாடல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இவர்கள் விவாகரத்து நாடகம் நடத்தியதாக அப்போது இவர்கள் மீது விமர்சனம் எழுந்தது. ஆன்லைன் டிரேடிங் மூலம் மோசடி, நண்பனின் சகோதரிக்கு தவறாக மெசேஜ் அனுப்பியது உள்ளிட்ட புகார்களில் சிக்கிய விஷ்ணு, தற்போது அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
