நடிகை காஜல் அகர்வாலை ‘உங்க வீட்டுக்கே கூப்பிட்டுட்டு வர்றேன்’என்று அப்பாவி தொழில் அதிபர் மகன் ஒருவரிடம் ரூபாய் 75 லட்சம் ஆட்டயப் போட்ட தமிழ்ப்பட தயாரிப்பாளர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் பிரதீப்.கூகுளில் நடிகை காஜல் அகர்வாலை பார்த்து விட்டு அவரை தனது வீட்டிற்கு வரவழைக்க ஆசைப்பட்டவர், ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் சினிமா தியேட்டர், தங்கும் விடுதி, பள்ளி, கல்லூரி, மற்றும் சூப்பர் மார்க்கெட், பல வீடுகள் என கொடிகட்டி பறக்கும் மிக முக்கிய தொழிலதிபரின் மகன்.

இவர் கடந்த மாதம் திடீரென வீட்டிலிருந்து மாயமானார். பிரதீப் இரண்டு நாட்களாக காணவில்லை என்று தொழில் அதிபர் சார்பில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வந்த நிலையில் திடீரென அண்மையில் ஒரு நாள் தந்தையின் செல்போனை தொடர்பு கொண்ட பிரதீப்,தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்.அவர் பேசிய செல்போன் எண்ணை வைத்து பிரதீப் கொல்கத்தாவில் இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு பத்திரமாக ராமநாதபுரத்திற்கு அழைத்து வந்தனர். பிரதீப்பிடம் நடத்திய விசாரணையில் அவர் கூகுளில் காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகளை பார்த்து மயங்கி போய் பணத்தை பறிகொடுத்த பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

locanto என்ற இணையதளம் மூலமாக சினிமா நடிகைகளை விரும்பும் இடத்திற்கு அழைக்கலாம் என்று நண்பர்கள் சிலர் கூறியதை கேட்டு அந்த நபர் சம்பந்தப்பட்ட வெப்சைட்டில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.ரெஜிஸ்டர் செய்த 10 நிமிடத்திற்குள்ளாக அடையாளம் இல்லா எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர் சில சினிமா நடிகைகளின் புகைப்படத்தை அனுப்பி தேர்வு செய்யுமாறு கூறியுள்ளார். பிரதீப் உடனே தனது டார்லிங் காஜல் அகர்வால் பெயரை டிக் அடித்ததாகத் தெரிகிறது.

உடனேயே சம்பந்தப்பட்ட நபர், பிரதீப்பின் வேறுபட்ட சில புகைப்படம் மற்றும் அடையாள அட்டை போன்றவற்றை அனுப்புமாறு கூறியுள்ளார். இதற்கு செயல்பாட்டுக் கட்டணமாக 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் அதற்கு முன்பணமாக 25 ஆயிரம் ரூபாயை தான் குறிப்பிடும் அக்கவுண்டில் செலுத்தவேண்டும் என கூற, காஜல் மீது கொண்ட பிரியத்தால் பிரதீப்பும் மறுக்காமல் பணம் செலுத்தியுள்ளார்.இதையடுத்து நடிகை காஜல் அகர்வால் படப்பிடிப்பில் இருப்பதாகவும் இருதினங்களில் வீட்டுக்கே அனுப்பி வைக்கிறோம் என்று கூறி எதிர் முனையில் பேசியவர் நம்பிக்கை அளித்துள்ளார், நடிகை நம்ம வீட்டுக்கே வந்து விடுவார் என்று பிரதீப் கனவில் மிதந்திருக்க, பிரதீப்பின் செல்போன் எண் மற்றும் அவர் அனுப்பிய அடையாள அட்டை, வங்கி பண பரிவர்த்தனைகள் மூலம் அவர் கோடீஸ்வர தொழில் அதிபரின் மகன் என்பதை கண்டறிந்துள்ளான் அந்த மர்ம நபர்..!

இதையடுத்து பிரதீப் தங்க முட்டையிடும் வாத்து என்பதை தெரிந்து கொண்டு காஜல் அகர்வாலுடன் அவர் ஒன்றாக இருப்பது போன்று மார்பிங் செய்யப்பட்ட அரை நிர்வாண புகைபடங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி பிரதீப்பை மிரட்ட தொடங்கியுள்ளான் அந்த நபர்.அதோடில்லாமல் பிரதீப், அந்த நபரிடம் பேசிய ஆடியோ உரையாடல்களையும் ஆபாச இணையதளங்களின் விபரங்களையும் கைவசம் வைத்திருப்பதாக மிரட்டிய அந்த மர்ம நபர் இந்த விவரங்களை எல்லாம் நெருங்கிய உறவினர்கள் இருவருக்கு அனுப்பி வைக்க போவதாக கூறி அச்சுறுத்தி உள்ளான்.

பொறியில் சிக்கிய எலியாக தவித்த பிரதீப்  அவர்கள் சொல்வதை எல்லாம் செய்வதாக ஒப்புக்கொண்டு முதல் கட்டமாக 5 லட்சத்தை மிரட்டல் நபர் சொன்ன வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். அப்படியே அடுத்தடுத்து மிரட்டி 75 லட்ச ரூபாய் வரை குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்த வைத்துள்ளான்.ஒருகட்டத்தில் பணத்தையும் இழந்து மானத்தையும் இழக்கும் நிலை வருமோ என்று அஞ்சிய தொழிலதிபரின் மகன் வீட்டைவிட்டு கொல்கத்தாவுக்கு சென்று தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நிலையில்தான் காவல்துறையினரால் மீட்கப்பட்டார்.

பணப்பரிவர்தனை செய்யப்பட்ட வங்கி கணக்கு எண்ணை வைத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த பாவனா கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்கிற சிவாவை பிடித்து விசாரித்தனர், அவரோ தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் தான் ’நார்கோட்டிஸ்’ என்ற தமிழ் சினிமா படத்தை இயக்கி வருதாகவும் அதன் தயாரிப்பாளரான சரவணகுமார் என்கிற கோபால கிருஷ்ணன் தான், தன்னுடைய வாங்கிக்கணக்கில் படப்பிடிப்பிற்காக சிலரை பணம் செலுத்த சொல்லி இருப்பதாக கூறி பணத்தை வாங்கிச்சென்றார் என தெரிவித்தார்.

மணிகண்டன் கொடுத்த தகவலின் பேரில் சென்னை அசோக் நகர் பகுதியிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த தயாரிப்பாளர் சரவணக்குமாரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் காஜல் அகர்வால் மார்பிங் படத்தை காட்டி தொழிலதிபர் மகனிடம் மிரட்டிப்பெற்ற பணத்தில் 65 லட்சம் ரூபாயை உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் செலவு செய்துவிட்டதாக கூறினார்.இதையடுத்து சரவணக்குமார் வங்கி மற்றும் கையில்வை த்திருந்த 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.சரவணக்குமார் மீது பண மோசடி, தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.