தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர் ஒருவர் சுமார் 45 கதாபாத்திரத்தில் நடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
10 வேடங்களில் நடித்து அசத்திய கமல்
தென்னிந்திய திரைப்படத் துறை அதன் தனித்துவமான கதைகள் மற்றும் வலுவான நடிகர்களால் பார்வையாளர்களை ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறது. ஒரு நடிகரால் ஒரே படத்தில் பல கதாபாத்திரங்களில் நடிக்க முடியும். பெரும்பாலும் இரட்டை வேடங்களில் நடிப்பதே சிரமம். இருப்பினும் சில நடிகர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் கூட நடித்திருக்கின்றனர். குறிப்பாக தமிழில் நடிகர் கமலஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் 10 கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதற்கு முன்பாக ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் நான்கு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கமலை ஓவர்டேக் செய்த மலையாள நடிகர்
‘தசாவதாரம்’ படத்தில் கமலஹாசனின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பல்ராம் நாயுடு, பஞ்சாபி பாடகர், ஆங்கிலேயர், வயதான பாட்டி என பத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருந்தார். தற்போது அவரை ஓவர் டேக் செய்து 45 கதாபாத்திரத்தில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் மலையாள நடிகர் ஒருவர் இடம் பெற்றுள்ளார். ஜான் ஜார்ஜ் என்ற அவர் ‘ஆராணு ஞான்’ என்கிற படத்தில் 45 வேடங்களை ஏற்று நடித்துள்ளார்.
ஒரே படத்தில் 45 கதாபாத்திரத்தில் நடித்த ஜான்சன் ஜார்ஜ்
இந்தப் படம் 2018 மார்ச் 9ம் தேதி வெளியானது. வி.ஆர் உன்னிகிருஷ்ணன் இந்த படத்தை இயக்கியிருந்தார். படம் வெளியான போது இந்த படத்திற்கு வெளியே அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற பின்னர் இந்தப் படத்தை ரசிகர்கள் தேடித்தேடி பார்த்து வருகின்றனர். மகாத்மா காந்தி, அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தா, டாவின்சி, இயேசு கிறிஸ்து போன்ற 45 கதாபாத்திரத்தில் ஜான்சன் ஜார்ஜ் நடித்திருந்தார். படத்தின் ரன்னிங் டைம் 1 மணி நேரம் 47 நிமிடங்கள் ஆகும்.
‘ஆராணு ஞான்’ படத்தின் கதை என்ன?
இந்தக் கதை குறித்து பார்த்தால் க்ளோப் மேன் என்று அழைக்கப்படும் ஒரு மனிதனைப் பற்றியது. இந்த கதாபாத்திரம் தன்னுடைய அடையாளம் என்ன என்பதை அறிந்து கொள்ள உலகம் முழுதும் பயணம் செய்யும் கதாபாத்திரமாகும். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலமும் படம் நான் யார்? எனது உண்மையான அடையாளம் என்ன? என்ற கேள்வியை எழுப்புகிறது.
சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் ‘ஆராணு ஞான்’ படம்
கின்னஸ் சாதனைக்குப் பின்னர் ஜான்சன் ஜார்ஜுக்கு சினிமாவில் ஒரு தனி அங்கீகாரம் கிடைத்தது. இவரின் சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியவில்லை. நீங்கள் வித்தியாசமாகவும், அற்புதமாகவும் ஒரு திரைப்படத்தை பார்க்க விரும்பினால் ‘ஆராணு ஞான்’ திரைப்படம் உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்.
