டிசம்பரில் கமல் கலந்துகொள்வதற்காக போடப்பட்ட'இந்தியன் 2’ செட் சம்பந்தமான படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்ளமுடியாமல் போனதால் அப்படம் டிராப் ஆகிவிட்டதாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடமாடிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான ‘2.0’ மிகவும் தாமதமாகிவிட்டதால் சிறிதும் ஓய்வெடுக்காமல் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பைத் திட்டமிட்டிருந்தார் ஷங்கர். இதன்படி ‘2.0’ ரிலீஷுக்கு முன்பே ’இந்தியன் 2’ செட் வேலைகள் துவங்கியிருக்க, டிசம்பர் 10ம் தேதியிலிருந்து கமல் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக இருந்தது.

ஆனால் கஜா புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடுவதற்கு முன்னுரிமை அளித்த கமல் படப்பிடிப்பை பிப்ரவரிக்குத் தள்ளிப்போட்டார். இதை ஒட்டி தயாரிப்பு தரப்புக்கும் ஷங்கருக்கும் கமலுக்கும் இடையில் பிரச்சினைகள் தோன்றியிருப்பதாக வதந்திகள் கிளம்பின.

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்துக்கு போடப்பட்ட செட்டில் ஷங்கர் இருப்பது போன்ற போட்டோ ஒன்று வெளிவந்துள்ளது.அந்த போட்டோவை பார்க்கும்போது, ’இந்தியன்’ படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் கமல்ஹாசன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தற்போது வெளியாகியிருக்கும் செட்டானது சீனா போன்று தோற்றமளிப்பதால், கதையின் தொடர்ச்சி சீனாவில் இருந்து தொடங்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் அதாவது ஜனவரியிலேயே தொடங்கக்கூடும் என்றும் ஆனால் படத்தின் ரிலீஸ் 2020 பொங்கலுக்குத்தான் இருக்கும் என்றும் தெரிகிறது.