​பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், ப்ரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஒன்றிணைந்துள்ளது. பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு ராக்கிங் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

2017ம் ஆண்டே இந்தியன் 2 படம் குறித்து அறிவிப்பு வெளியான போதும், ஷூட்டிங் கடந்த ஆண்டு தான் தொடங்கியது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியன் 2  படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு சுமார் 9 மணி அளவில் சண்டைக்காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. 

அப்போது பகல் போன்ற வெளிச்சம் ஏற்படுத்துவதற்காக ராட்சத கிரேன் அந்த இடத்தில் அமைக்கப்பட்ட இருந்தது. அப்போது ராட்ச கிரேன் திடீரென அறுந்து விழுந்ததில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பு உதவியாளர் மதுசூதனராவ் , ஆர்ட் உதவியாளர் சந்திரன் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு கிரேன் விபத்து தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வந்ததால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இடையில் கொரோனா பிரச்சனை காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே 6 மாதத்திற்கு முடங்கியது. 

தற்போது படப்பிடிப்பிற்கு அனுமதி கொடுக்கப்பட்டாலும் இந்தியன் 2 படத்திற்கு 100 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு ஷூட்டிங் நடத்துவது சிரமம் என்பதால் ஷங்கர் படப்பிடிப்பை ஆரம்பிக்காமல் இருந்து வந்தார். மேலும்  அடுத்தடுத்து வந்த தடங்கலால் இந்தியன் 2 படப்பிடிப்பையே நிறுத்திவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த லைகா நிறுவனம் கண்டிப்பாக படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவோம் என்று கூறி கமல் ரசிகர்களை குஷியாக்கியது. ஆனால் பட்ஜெட் தொகையை குறைக்க வேண்டும் என ஷங்கருக்கு கட்டளை போட்டது. அதையும் ஏற்றுக்கொண்ட ஷங்கர் ரூ. 400 கோடியில் இருந்து ரூ. 220 கோடியாக பட்ஜெட்டை குறைத்துக் கொண்டார்.

 

இதையும் படிங்க: குழந்தை பெற்ற பிறகும் கும்முன்னு இருக்கும் ஆல்யா மானசா... மணப்பெண் கெட்டப்பில் மனதை மயக்கும் போட்டோஸ்...!

ஆனால் லைகா நிறுவனம் இன்னும் சில கோடிகளை குறைக்க வற்புறுத்தியுள்ளது, அதற்கு ஷங்கர் சம்மதிக்கவில்லை என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் ஷங்கர் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளதாம். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பை எடுக்கப்போகிறீர்களா? இல்லை என்றால் நான் எனது அடுத்த பட வேலைகளை கவனிக்கட்டுமா? என கறாராக கேட்டுள்ளாராம். இதுகுறித்து இன்னும் ஒரிரு நாட்களில் முடிவு தெரிந்துவிடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.