தென்னிந்திய சினிமா புதிய உச்சங்களை எட்டியதன் அடையாளம் தான் தேசிய விருதில் எதிரொலிக்கிறது - கமல்ஹாசன் புகழாரம்

69-வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் வென்றவர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

Indian 2 actor Kamalhaasan wishes national award winners

தேசிய விருது வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “69-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான விருது 'கடைசி விவசாயி' படத்திற்கும், அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய மறைந்த நல்லாண்டி அவர்களுக்கு ஸ்பெஷல் மென்ஷன் அங்கீகாரமும் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தயாரிப்பாளர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிகண்டன் மற்றும் குழுவினருக்கு என் அன்பும் பாராட்டும்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெறும் முதல் தெலுங்கு நடிகர் எனும் புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கும் அல்லு அர்ஜூன், சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள “ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்" திரைப்படத்தின் இயக்குனர் ஆர்.மாதவன் மற்றும் குழுவினர். பல பிரிவுகளில் விருதுகளை அள்ளிய ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி மற்றும் குழுவினர், புஷ்பா திரைப்படத்திற்காக சிறந்த பாடல் இசை பிரிவில் விருது பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இரவின் நிழல் படத்தின் பாடலுக்காக சிறந்த பாடகி விருது பெற்ற ஷ்ரேயா கோஷல். சிறந்த கல்வித் திரைப்படம் பிரிவில் "சிற்பங்களின் சிற்பங்கள்" படத்தை இயக்கி விருது வென்றுள்ள இயக்குநர் பி. லெனின், "கருவறை" ஆவணப் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்ற ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தென்னிந்திய சினிமா உள்ளடக்கத்திலும், தொழில்நுட்பத்திலும் பல புதிய உச்சங்களை எட்டியதன் அடையாளம் தேசிய விருதுகளின் பட்டியலில் எதிரொலிக்கிறது. இந்த வெற்றி தொடரட்டும்!” என குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் கமல்ஹாசன். அவரின் இந்த வாழ்த்துப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த ஆண்டு கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளதால், அப்படம் பல்வேறு விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... விருதுகளை குவித்த தெலுங்கு படங்கள்; வெறுங்கையோடு திரும்பிய தமிழ் படங்கள்- யார் யாருக்கு விருது - முழு லிஸ்ட்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios