தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது மட்டுமல்லாமல் வேறு சில அமைப்புகளை வைத்து படப்பிடிப்பு நடத்த முயற்சிக்கும், திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களைக் கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக  பெப்சி அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான  பெப்சி அமைப்பின் சார்பில் சென்னை வடபழனியில் பொதுக்குழு கூட்டம் ஆர்.கே.செல்வணி தலைமையில் நடந்தது.

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி,  பெப்சி அமைப்புக்கு எதிராக மற்றொரு அமைப்பை உருவாக்க தயாரிப்பாளர் சங்கம் முயற்சிக்கிறது என குற்றம்சாட்டினார்.

தயாரி்ப்பாளர் சங்கத்தினரோடு இதுவரை இணக்கமாகவே செயல்பட்டு வருகிறோம என்று தெரிவித்த அவர்,  சினிமா தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை சந்தித்திருக்கின்றனர் என்றும் அந்த வகையில்,தமிழ் திரைத்துறை நலனுக்காகவே பெப்சி தொழிலாளர்கள் தொடர்ந்து உழைத்து வருகின்றனர் எனவும் கூறினார். 

தங்களது  கோரிக்கைகளை ஏற்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த நிறுத்த போராட்டம் நடைபெறும் என்றும்  ஆர்.கே.செல்வமணி  தெரிவித்தார்.

போராட்ட அறிவிப்பால் நடிகர் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா, விஜய் நடிப்பில் உருவாகி வரும் மெர்சல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்டதிரைப்படங்களின்  படப் பிடிப்புகள் பாதிக்கப்படும் என தெரிகிறது.