ஏறத்தாழ இறுதிக்கட்டப் படப்பிடிப்புக்கு வந்துவிட்ட கவுதம் மேனனின், ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சசிகலாவின் பாத்திரம் முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. ஏற்கனவே பெரும் பண நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் புதிய சர்ச்சைகள் எதிலும் சிக்கவேண்டாம் என்று கவுதம் இம்முடிவை எடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சிகள் பல்வேறு இயக்குநர்களால் பல்வேறு திரைகதைகளுடன் நடந்துவருகின்றன. முதலில் இயக்குனர் மிஷ்கினின் உதவியாளரான பிரியதர்ஷினி, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்கப்போவதாக அறிவித்தார். நித்யாமேனன் இதில் ஜெயலலிதாவாக நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை.

இன்னொரு பக்கம் இயக்குனர் ஏ.எல்.விஜய்யும், ஜெயலலிதாவின் வாழ்க்கையை ‘தலைவி’ என்கிற பெயரில் படமாக்க போவதாக அறிவித்தார். இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இன்னும் சில தினங்களில் துவங்கவிருப்பதாகவும் அதற்காக கங்கனா ரனாவத் பரத நாட்டியப் பயிற்சிகள் எடுத்து வருவதாகவும் தகவல்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் படத்துக்கு குயின் என்று பெயர் சூட்டியிருக்கும் கவுதம் மேனன் அவரது  குழந்தைப் பருவம், இளமை பருவம், எம்.ஜி.ஆர், சிவாஜியோடு திரைப்படங்களில் நடிக்கும் காட்சிகள், அ.தி.மு.க.வில் கொள்கைபரப்புச் செயலாளராக அரசியலில் காலடி வைத்தது, முதல் அமைச்சராக இருந்தது, இறந்தது என்று அனைத்தையும் படமாக்கி முடித்துவிட்டார்.இதில் ஜெயலலிதாவாக இதில் மொத்தம் மூன்று நடிகைகள் நடிக்கின்றனர். ‘படையப்பா’ படத்தில் நீலாம்பரி வேடத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். ‘இவன் வேற மாதிரி’ படத்தில் வில்லனாக நடித்த வம்சி கிருஷ்ணா, சோபன்பாபு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிறுவயது ஜெயலலிதா வேடத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடிக்கிறார்.

இந்த வெப் சீரிஸ் இன்னும் சில வாரங்களில் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இதில் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவின் பாத்திரத்தை முற்றிலும் கவுதம் தவிர்த்துவிட்டதாக நம்பகமான செய்திகள் வருகின்றன. சில வருடங்களாகவே பெரும் கடனாளியாய் வலம் வரும் கவுதமின் கடைசி இரண்டு படங்களான ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’,’துருவ நட்சத்திரம் ஆகிய இரு படங்களுமே ரிலீஸாகாமல் தத்தளிக்கின்றன. இந்நிலையில் தேவையில்லாமல் புதிய சர்ச்சைகளில் மாட்டவேண்டாம் என்று முடிவு செய்தே கவுதம் சசிகலா கேரக்டரை தவிர்த்ததாகத் தெரிகிறது.