’ஒரு பெரிய நடிகர் என்ற பந்தா துளி கூட இல்லாமல் ஒரு நண்பர் போல என்னிடம் நெருக்கமாகப் பழகினார் தனுஷ். எனக்கு இப்படப்பிடிப்பில் எல்லாமுமாக இருந்து என்னைக் கவனித்துக்கொண்டவர் அவர்’என்று அசுரனைப் புகழ்ந்து தள்ளுகிறார் கருணாஸின் மகன் கென்.

ஏற்கனவே ‘அழகு குட்டி செல்லம்’போன்ற ஒன்றிரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ‘அசுரன்’படத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரத்தில் அறிமுகமாகிறார் கென். நேற்று பிரசாத் லேப்பில் நடந்த அப்பட ஆடியோ வெளியீட்டுவிழாவில் படக்குழுவினர் அனைவரின் பெயரையும் தனித்தனியாகக் குறிப்பிட்டு மிகத் தெளிவாகப் பேசினார் அவர். ‘இந்த இடத்துக்கு நான் வருவதற்கு முக்கிய ஏணியாக இருந்த என் தந்தைக்கு நான் முதல் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அடுத்த நன்றி நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் வெற்றிமாறன் சாருக்கு. எனக்கு மிக முக்கியமான வேடம் கொடுத்து மிக அருமையாக நடிக்கவும் சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவருக்கு இதற்கு முன்பு படப்பிடிப்புத் தளத்தில் ஒருமுறை கூட நன்றி சொன்னதில்லை. இப்போது முதன்முறையாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அடுத்து தனுஷ் சார் ஒரு நண்பனைப் போல் நடந்துகொண்ட அவர் ஒரு தந்தையின் அக்கறையுடன் என்னைப்பார்த்துக்கொண்டார். எனக்கு எல்லாம் அவர்தான். அவரை நான் எப்போதும் மறக்கமாட்டேன்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இந்தப் படத்தின் புதுமுகங்கள் என்றால் அது நானும் எனக்கு அம்மாவாக நடித்த மஞ்சு வாரியர் மேடமும்தான். எப்போதும் நாங்கள் இருவர் மட்டும் கொஞ்சம் டென்சனாகவே இருப்போம். ஆனால் படத்தின் மூத்த கலைஞர்களான பசுபதி சார்,நரேன் சார்,பவன் சார் ஆகியோர் எங்களிடம் மிகவும் பிரியமாக ஜாலியாக அரட்டை அடித்தபடியேதான் இருந்தார்கள். அடுத்து ஜீ.விபிரகாஷ் அண்ணன் இந்தப் படத்தில் என்னை ஒரு பாடல் பாடவைத்திருக்கிறார். அவருக்கும் நன்றி’என்றார் கென். அவர் பேசிய தினுஷைப் பார்க்கும்போது தந்தையைப் போல் காமெடி நடிகனாக வராமல் தனுஷைப் போல் சீரியஸ் நடிகராக வருவார் என்றே தோன்றுகிறது.