இயக்குநர்கள் ஒரே ஒரு காட்சியில் தலை காட்டச்சொன்னால் கூட தெறித்து ஓடும் இளையராஜா தன் சுயசரிதையை யாராவது ஒருவர் படமாக எடுக்க முன்வந்தால் அதில் இசைநாயகனாக நடிக்கத் தயார் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

கடந்த பல கல்லூரி நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக நேற்று சென்னை ஐ.ஐ.டி.யிலும், இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய  இளையராஜா  ‘நல்ல வி‌ஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையைப் பாடமாக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதனால்தான் அதை என்னால் தொட முடிந்தது.

இசை அமைப்பாளர்களில் அதிக பாடல்களை பாடியும், பாடல்கள் எழுதியும், குறைந்த நேரத்தில் அதிக படங்களுக்கு இசையமைத்தும் சாதனை புரிந்துள்ளேன். மாணவர்களே கனவு காணாதீர்கள், முயற்சி செய்யுங்கள்.’ என்றார்.

அடுத்து ராஜாவிடம் மாணவர்கள் தொடர்ந்து கேள்விகள் பதில் சொல்லியும் சில கேள்விகளுக்கு பாடலாகவும் பாடிக்காட்டினார். இறுதியில் மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுமா? என்று கேட்ட போது, ‘சில தினங்களாக  என்னுடைய வாழ்க்கை வரலாறை சுயசரிதையாக எழுதி வருகிறேன். விரைவில் வெளியாகும். என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயாராக இருக்கிறேன்.  ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுப்பேன்’ என்று கிண்டலாக பதிலளித்தார்.

இதற்கு முன் இளையராஜாவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க எத்தனையோ இயக்குநர்கள் அவர்களைக் கையெடுத்துக்கும்பிட்டு அனுப்பிவைத்துவிடும் இளையராஜா மிகச் சில பாடல்காட்சிகளில் மட்டுமே தலைகாட்டியிருக்கிறார்.