கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  கடந்த மாதம் 13ம் தேதி அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. அதன் பிறகு தேறி வந்த அவருக்கு கடந்த 4ம் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று நெகட்டிவ் என்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் 1.04 மணிக்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

இதையடுத்து இன்று செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் மண்ணில் புதைக்கப்பட்டது. எஸ்.பி.பி. உயிரிழந்த செய்தியைக் கேள்விப்பட்ட இளையராஜா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “பாலு... சீக்கிரம் எழுந்து வா... உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என கூறினேன். ஆனா நீ கேட்கல, போய் விட்டாய். எங்க போன? கந்தர்வர்களுக்காக பாட போய்டியா? இங்க உலகம் ஒரு சூனியமா போச்சி. உலகத்துல ஒன்னும் எனக்கு தெரியல. பேசுவதற்கும்  பேச்சு வரல, சொல்றதுக்கு வார்த்தையில்லை. என்ன சொல்றதுன்னே தெரியல. என மறு வார்த்தை பேச முடியாமல் குரல் விம்மி நின்றார். 


இந்நிலையில் எஸ்.பி.பி.யின் ஆன்மா சாந்திடைய வேண்டி திருவண்ணாமலை கோவிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எஸ்பிபியின் நெருங்கிய நண்பர் இசையமைப்பாளர் இளையராஜா. இருவரும் இணைந்து பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளனர். எஸ்பிபிக்கு உடல்நிலை மோசமடைந்தபோது, 'பாலு சீக்கிரம் எழுந்து வா' என்று உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.