"இளையராஜாவின் இசை நமக்கு புரியும் போது, அறிவில் வளர்ச்சி அடைவது போல எனக்கு தோன்றுகிறது. அந்த இசை மண் சார்ந்து இருக்கிறது."
இசைஞானி இளையராஜா எங்கள் சொத்து என்று நான் பெருமையாகச் சொல்வேன் என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுடன் இணைந்த யுவன் ஷங்கர்
யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாமனிதன்’. இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியான நிலையில், அதன் பாடல் வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யுவன் ஷங்கர் ராஜா பேசுகையில், “‘இந்தப் படத்துக்காக நான் விஜய் சேதுபதியை அணுகினேன். அப்போது கால்ஷீட் இல்லை என்றுதான் என்னிடம் விஜய் சேதுபதி கூறினார். பிறகு அவரிடம் நானும், அப்பாவும் சேர்ந்து ஒன்றாக இந்தப் படத்தில் இசை அமைக்கப் போகிறோம் என்று சொல்லித்தான் சம்மதிக்க வைத்தேன். இந்தப் படத்தில்அப்பாவுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். படத்தை நான் தயாரிப்பதால்தான் இது சாத்தியமானது” என்று யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்தார்.

விஜய் சேதுபதி பெருமிதம்
நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசும் போது, ‘‘இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைக்கும் படத்தில் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு அமைந்திருக்கிறது. இது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இளையராஜாவின் வெறித்தனமான ரசிகன். இளையராஜாவின் இசை நமக்கு புரியும் போது, அறிவில் வளர்ச்சி அடைவது போல எனக்கு தோன்றுகிறது. அந்த இசை மண் சார்ந்து இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜா எங்கள் சொத்து என்று நான் பெருமையாகச் சொல்வேன்’’ என்று விஜய் சேதுபதி பேசினார்.

வைரலான யுவன் ஷங்கர்
இளையராஜா மோடி தொடர்பான புத்தகத்தில் அவரைப் புகழ்ந்து எழுதியது அவருக்கு எதிராக விமர்சனங்களை கிளப்பியது. இந்த விவகாரம் நீண்டுக்கொண்டிருக்கும் நிலையில், யுவன் ஷங்கர் ராஜா, ‘கறுப்பு திராவிடன்; பெருமைமிகு தமிழன்’ என்று இணையத்தில் பதிவிட்டது வைரலானது. இந்த விவகாரங்களுக்கு மத்தியில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
