தமிழக மக்கள் அனைவரும் பயன்பெரும் வகையில், மிக விரைவில் இசைக் கல்லூரியைத் தொடங்க உள்ளதாகவும் அதுதன் வாழ்நாளின் விருப்பம் என்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில்  இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

 விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது: ’’அண்ணாமலைப் பல்கலை. சாஸ்திரி அரங்குக்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன். இதற்கு முன்பு கெளரவ டாக்டர் பட்டம் பெற வந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சிதம்பரத்தில் அமைந்துள்ள மற்றுமொரு கோயிலாகும். இது, புனிதமான இடம்.

பாடல்கள், இசையின் மூலம் மனிதனுக்கு சுத்தமான ஆற்றல் கிடைக்கிறது. இசையின் மூலம் பல்வேறு அதிசய சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இது இசையின் மகத்துவம் என்றார் இளையராஜா. தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட கேள்விக்கு இளையராஜா பதிலளித்தார். அப்போது, மாணவர் ஒருவர், நீங்கள் இசையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டார். அதற்கு, இசையை நான் தேர்ந்தெடுக்கவில்லை. இசைதான் என்னைத் தேர்த்தெடுத்தது என்றார்.

வெளிநாடுகளில் இசைக் கச்சேரிக்கு சென்றபோது ஏற்பட்ட அனுபவம் குறித்து மற்றொரு மாணவர் கேட்ட போது, அங்கே நடைபெறும் இசை நிகழ்ச்சியின்போது அமைதி, ஒழுக்கம், கட்டுப்பாடு காணப்பட்டது என்றார். இசைக் கல்லூரி தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு, அதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளேன். விரைவில் இசைக் கல்லூரி தொடங்கப்படும். அந்த இசைக்கல்லூரியின் மூலம் தமிழக மக்கள் அனைவரையும் இசை சென்றடையவேண்டும் என்பதே என் விருப்பம்’ என்றார்.

பிப்ரவரி 2,3 தேதிகளில் நடக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியில் அந்த இசைக்கல்லூரி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ராஜா வெளியிட்டாலும் ஆச்சர்யப்படவேண்டியதில்லை.