செங்கோல் சரியான இடத்துக்கு தான் திரும்ப வந்திருக்கிறது - பிரதமர் மோடியை வாழ்த்திய இளையராஜா
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
டெல்லியில் ரூ.970 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை குறிக்கும் வகையில் இந்த நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி தான் இந்த நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த திறப்பு விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து ஏராளமான அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதும், அதில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலை நிறுவ உள்ளார் பிரதமர் மோடி. இந்த செங்கோலை தமிழகத்தை சேர்ந்த ஆதீனங்கள் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வழங்கினர். இந்நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ள பிரதமர் மோடிக்கு இசையமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இளையராஜா வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கின்றார். நாட்டின் குடிமகனாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும், புதிய கட்டிட திறப்பு விழாவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். குறுகிய காலத்தில் இந்த கட்டிடத்தை கட்டி முடிக்க உதவிய பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் என் வாழ்த்துக்கள்.
இதையும் படியுங்கள்... தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல்: பிரதமருக்கு ரஜினிகாந்த் நன்றி
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவைக் கொண்டாடும் இத்தருணத்தில், மாற்றத்திற்கான கொள்கைகள் மற்றும் முக்கிய முடிவுகளை எடுக்கும் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் திகழ வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன். பழங்கால தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பெருமையும் கொண்டது செங்கோல். நீதி, நேர்மை, ஒழுங்கு மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக இந்த செங்கோலை போற்றினர். இந்த செங்கோல் சரியான இடத்திற்கு திரும்ப வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவராக இருக்கும் மோடியிடம், இந்தியாவை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்கு பார்வை உள்ளது. அவரது அனைத்து முயற்சிகளிலும் கடவுள் அருள் இருக்கட்டும். இந்த முக்கியமான தருணத்தில் அவரையும், இந்திய அரசையும் மனதார வாழ்த்துகிறேன்” என இளையராஜா அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...செங்கோலை ஒப்படைத்த ஆதீனங்களிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி