லதா மங்கேஷ்கர், தமிழில் பணியாற்றிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா தான். இவர் இசையில் ஆனந்த், சத்யா, என் ஜீவன் பாடுது போன்ற படங்களில் பாடியுள்ளார் லதா.
இந்திய திரையுலகில், மிகச்சிறந்த பின்னணிப் பாடகியாக புகழ் பெற்று விளங்கியவர் லதா மங்கேஷ்கர். தனது தேனிசைக் குரலால் அரை நூற்றாண்டாக ரசிகர்களை மகிழ்வித்து வந்த அவர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 92. அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவரது மறைவுக்கு திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: இந்திய திரைப்பட இசையுலக வரலாற்றில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய தெய்வீக, காந்தர்வ குரலால், உலக மக்களையெல்லாம் மயக்கி தன் வசத்தில் வைத்திருந்த லதா மங்கேஷ்கரின் மறைவு, ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்று தெரியவில்லை. அவருடையை இழப்பு இசையுலகிற்கு மட்டுமல்ல, உலகத்திற்கே மிகப்பெரிய இழப்பாகும். அவரை இழந்த தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
லதா மங்கேஷ்கர், தமிழில் பணியாற்றிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா தான். பிரபு நடித்த ஆனந்த் என்கிற படத்துக்காக ஆராரோ ஆராரோ’ என்ற பாடல் தான் இளையராஜா இசையில் அவர் பாடிய முதல் பாடலாகும். இதையடுத்து கமல் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை கலகலவென’ என்கிற பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பி உடன் இணைந்து பாடினார் லதா மங்கேஷ்கர்.

இந்தப் பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பின்பு கார்த்திக் நடிப்பில் வெளியான ‘என் ஜீவன் பாடுது’ என்கிற படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்கிற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்தும், சோலோவாகவும் பாடியிருந்தார் லதா மங்கேஷ்கர். இந்தப் படத்திற்கும் இசைஞானி இளையராஜா தான் இசை. அதன்பிறகு அவர் தமிழில் வேறெந்த பாடல்களையும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
