சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் தான் இசைஞானி இளையராஜாவின் ரெக்கார்டிங் பணிகளை  பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தார். அவருக்கென தனி தியேட்டா் ஒதுக்கி கொடுத்திருந்தது பிரசாத் ஸ்டுடியோ நிா்வாகம். இளையராஜா தனது பெரும்பாலான படங்களுக்கு அங்குதான் இசையமைத்தாா். இளையராஜாவின் திறமையை மதித்து எல்.வி.பிரசாத் இந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தார் என்பது அனைவரும் அறிந்தது தான். 

ஆனால் எல்.வி.பிரசாத்தின் வாரிசுகள் இளையராஜாவின் ஸ்டூடியோவை இடித்துவிட்டு, புது தியேட்டர் கொண்டு வர முடிவு செய்ததால் கடந்த ஒரு வருடமாக பிரசாத் ஸ்டுடியோவில் இருந்து இளையராஜா காலி செய்து தர வேண்டும் என, அதன் நிர்வாகத்தினர் அவருக்கு நெருக்கடி கொடுத்து காலி செய்யவைத்தனர். 

பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு எதிராக இயக்குனர் பாரதி ராஜா,  தலைமையில், பிரபலங்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மேலும் இதுகுறித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தன்னுடைய பொருட்களை எடுக்க அனுமதி கோரி தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த, நீதிமன்றம், அவரது இசை கருவிகள் மற்றும், ஸ்டூடியோவில் உள்ள பொருட்களை எடுக்க அனுமதிக்காதது ஏன் என்றும், இளையராஜாவை சிலமணி நேரம் தியானம் செய்ய கூட அனுமதிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

டிசம்பர் 21 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்த நீதி மன்றம், பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள் 21  ஆம் தேதி ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என்றும், இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்கவும் நீதி மன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இதை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் ரூ.50 லட்சம் இழப்பீடு தர கோரி இசையமைப்பாளர் இளையராஜா  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.