I Will not return my awards says Prakash Raj

மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி கருத்து ஏதும் கூறாமல் இருப்பது கண்டு பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், விருதுகளை திருப்பித் தருவேன் என்று கூறியிருந்ததாக செய்திகள் வந்தன.

 அது குறித்து இன்று அவர் அளித்துள்ள விளக்கத்தில் “ தேசிய விருதுகள் என் உழைப்புக்கு கிடைத்த வெகுமதி அதை திருப்பிக் கொடுக்க நான் முட்டாள் இல்லை. கவுரி லங்கேஷ் கொலையில் பிரதமர் மோடி மவுனம் காப்பதுதான் வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மூத்த பத்திரிகையாளராகவும், மூட நம்பிக்கை எதிர்ப்பாளராகவும், முற்போக்கு சிந்தனையாளராகவும் விளங்கியவர் கவுரி லங்கேஷ். லங்கேஷ் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான கவுரி லங்கேஷ், மதவாத கருத்துக்களை தீவிரமாக எதிர்த்து, எழுதியும் வந்தார். 

இந்நிலையில், கடந்த மாதம் மர்மநபர்களால் அவரின் வீட்டு முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கு குறித்து விசாரிக்க சிறப்பு குழுக்களை கர்நாடக அரசு அமைத்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், பெங்களூரில் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு(டி.ஓய்.எப்.ஐ.) சார்பில் 11-வது மாநில மாநாடு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு பேசுகையில், “ மோடிதான் மிகப்பெரிய நடிகர் எனது விருதுகளை நான் அவருக்கு திருப்பி தருவேன்” என்று தெரிவித்தார். இது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது நிலைப்பாடு குறித்து இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது-

நான் பெற்ற தேசிய விருதுகளை திருப்பித் தரப்போவதாக செய்திகள் வலம் வருகின்றன. அது முற்றிலும் பொய்யானது. தேசிய விருதுகள் என்பது என் நடிப்புக்கும், உடல்உழைப்புக்கும் கிடைத்த வெகுமதி. அதை திருப்பிக் கொடுக்க நான் முட்டாள் இல்ைல.

நான் சில விஷயங்களைக் குறிப்பிட்டு கருத்துக் கூறியிருந்தேன். நான் ேமடையில் இளைஞர்கள் மத்தியில் பேசுகையில், சமீபத்தில் கொல்லப்பட்ட எழுத்தாளர் கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் குறித்த விவாதம் எழுந்தது.

என்னைப் பொருத்தவரை கவுரி லங்கேஸை கொலை செய்தது யாரென்று தெரியாது. போலீசார், மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவினர் தேடி வருகிறார்கள். ஆனால், சிலர் இந்த கொலையை கொண்டாடுவதை பார்க்கிறேன். அதை நினைத்து மிகவும் வேதனையாக இருக்கிறது. மனிதநேயமற்ற இந்த கொலையை செய்தவர்கள், அதை கொண்டாடுபவர்களை நினைத்து எனக்கு வலியாக இருக்கிறது. வார்த்தைகள் கொப்பளிக்கின்றன. இவர்களைப் பற்றி கெட்ட வார்த்தையில் பேசிவிடுவேன் என எண்ணுகிறேன்.

அதேசமயம், நாட்டின் பிரதமருக்கு நான் கேட்கும் கேள்வி என்னவென்றால், இதுபோன்ற மனிதநேயமற்ற கொலையைச் செய்தவர்கள் உங்களை டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பின் தொடர்கிறார்களே?, நீங்கள் எந்த நிலைப்பாடும் அவர்கள் குறித்து எடுக்கமாட்டீர்களா? என்பதுதான். நாட்டின் குடிமகனான நீங்கள் இது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டீர்களா?

பிரதமர் மோடியின் மவுனம் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவரின் மவுனம் என்னை மிகவும் அச்சுறுத்துகிறது. நான் எந்த கட்சியையும் சாராதவன், நான் வேறு எந்த கட்சியை குறித்த நபர்களைப் பற்றியும் பேசவில்லை. அவர் சார்ந்திருக்கும் கட்சியின் உறுப்பினர்களைப் பற்றியே பேசுகிறேன். என் பிரமதரிடம்தான் பேசுகிறேன்.

அவரின் மவுனம் எனக்கு அச்சமாக இருக்கிறது, என்னை வேதனைப்படுத்துகிறது. இதைத் தான் நான் மேடையில் பேசினேன். ஆனால், அதற்குள் பிரகாஷ்ராஜ் தேசிய விருதுகளை திருப்பிக் கொடுக்கப் போகிறார் என்று செய்திகள் வலம் வந்துவிட்டன. நான் பேசாத விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்குமேல் இது குறித்து நான் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.