I thought want to act a friend of thala thalapathi - Sivakarthikeyan ...
தல, தளபதிக்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்று நினைத்தவன் நான் என்று சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் சின்னத் திரையில் மட்டும் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் சிவா.
சமீபத்தில் நடந்த கல்லூரி விழா ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன், “டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது எனக்கு பெரிய ஹீரோவாக வர வேண்டும் என்ற ஆசையெல்லாம் இருந்ததில்லை.
உண்மையில், தல அஜித், தளபதி விஜய்க்கு நண்பனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலே போதும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தனுஷ், இயக்குனர் பாண்டியராஜ் ஆகியோர் எனக்கு வாய்ப்பு கொடுத்து என்னை ஹீரோவாக உருவாக்கிவிட்டார்கள்.
இப்போது டிவியில் இருந்து யார் வந்தாலும் இவர் சிவகார்த்திகேயன் மாதிரி வந்துவிடுவார் என்று சொல்லும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது.
யாரெல்லாம் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துகிறார்களோ, அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் முன்னேறிவிடுகிறார்கள். அதனால், யார் என்ன சொன்னாலும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், அவரவர் மனதிற்கு என்ன தோன்றுகிறதோ அதை மட்டும் செய்யுங்கள்” என்று கூறி ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றார்.
