தனது கணவர் பிரபல நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக சந்தேகப்பட்ட பிரபல நடிகரின் மனைவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். சந்தேகத்தின் பேரில் போலீஸார் நடிகரைக் கைது செய்தனர்.

ராஜமவுலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘பாகுபலி’ படத்தில் நடித்துள்ளவர் மதுபிரகாஷ். டி.வி. தொடர்களிலும் நடிக்கிறார். இவருக்கும் பாரதி என்ற பெண்ணுக்கும் 2015-ல் திருமணம் நடந்தது. இவர்கள் ஐதராபாத்தில் வசித்து வந்தனர்.  சமீபகாலமாக மதுபிரகாஷ் ஒழுங்காக வீட்டுக்கு வருவது இல்லை என்று கூறப்படுகிறது.

கணவரின் அலட்சியப்போக்கு குறித்து கவலைகொண்ட பாரதி அவரது சினிமா நண்பர்கள் வட்டாரத்தில் விசாரணை மேற்கொண்ட வகையில், அவருக்கும் சக நடிகை ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பாரதி சந்தேகித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கணவர் மீது பாரதி போலீசில் புகார் செய்தார். இதையொட்டி ரவி பிரகாஷையும் அவரது உறவினர்களையும் காவல் நிலையம் வரவழைத்த போலீஸார் இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மது பிரகாஷ், மனைவி பாரதியிடம் ஜிம்முக்கு சென்றுவிட்டு அங்கிருந்து நேராக டெலிவிஷன் நிகழ்ச்சி படப்பிடிப்புக்கு போய்விடுவேன் என்று கூறி விட்டு சென்றார். அவர் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிறகு பாரதி போனில் தொடர்புகொண்டு உடனடியாக வீட்டுக்கு வரவேண்டும் என்று அழைத்தார். நீங்கள் வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார். 
அதனை மதுபிரகாஷ் பொருட்படுத்தவில்லை. இரவு 7.30 மணிக்கு அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது பாரதி மின் விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மது பிரகாஷ் மீது வரதட்சணை தடுப்புச் சட்டம் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்த போலீஸார் அவரைக் கது செய்து விசாரித்துவருகின்றனர்.