தென்னிந்திய சினிமாவில் நடித்தபோது தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே, சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம்.

Radhika Apte Controversy : பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே (Radhika Apte) பல வெற்றிப் படங்களில் நடித்து, தனது நடிப்பால் பாராட்டுக்களைப் பெற்றவர். இவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில், ராதிகா ஆப்தே 'சாலி முகமது' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது தோற்றத்தை விட நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் நிலையில், தென்னிந்திய சினிமாவில் தான் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார் ராதிகா ஆப்தே.

அதன்படி, தென்னிந்தியாவில் பல நல்ல படங்கள் வருகின்றது. படத்தில் எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக என்னுடைய மார்பகம் மற்றும் பின் பகுதியில் அதிக பேட்களை வைக்க சொன்னார்கள். நான் மேக்கப் போட்டு கொண்டிருக்கும்போது உதவி இயக்குநர்கள் வந்து, மேடம் பேடிங் என சொல்லிவிட்டு செல்வார்கள் அப்போது அசெளகரியமாக இருக்கும். ரொம்ப கோபமும் வரும். உங்கவீட்டில் அம்மா, தங்கைகளிடம் இப்படி தான் அதிகம் பேட் வைக்க சொல்வீர்களா என கேட்கத் தோன்றும் என ராதிகா ஆப்தே கூறி உள்ளார்.

ராதிகா ஆப்தேவின் கசப்பான அனுபவம்

அதேபோல் தான், உடல் எடையால் ஒரு பட வாய்ப்பை இழந்த விஷயத்தைப் பகிர்ந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ராதிகா ஆப்தேவை மனதில் வைத்து ஒரு கதை எழுதப்பட்டது. இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருந்தது. ஒரு பயணத்திற்குத் திட்டமிட்டிருந்த ராதிகா ஆப்தே, பயணம் முடிந்து வந்த பிறகு படப்பிடிப்பில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். பயணத்தின்போது எந்த டயட்டையும் பின்பற்றப் போவதில்லை, எடை அதிகரிக்கலாம், ஆனால் திரும்பி வந்த பிறகு நடனம் மற்றும் உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி எடையைக் குறைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ராதிகா இருந்தார்.

ஆனால், பயணம் முடிந்து வந்தபோது எல்லாம் தலைகீழாக மாறியிருந்தது. ராதிகா பெரிதாக ஒன்றும் எடை கூடிவிடவில்லை. வெறும் நான்கு கிலோதான் அதிகரித்திருந்தது. எடையைக் குறைத்துவிடுவதாக அவர் உறுதியளித்தும், இடையில் ஒரு போட்டோஷூட் நடத்தப்பட்டது. புகைப்படங்களைப் பார்த்தவர்கள், நீங்கள் குண்டாக இருக்கிறீர்கள் என்று கூறி நிராகரித்துவிட்டனர். பின்னர் வேறு ஒரு நடிகையை வைத்து அந்தப் படம் எடுக்கப்பட்டது. அந்தப் படம் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அந்த நடிகை ஒரு பெரிய ஹீரோயின் ஆனார் என்று ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.