இந்தியாவில் கொரோனா பிரச்சனை காரணமாக மார்ச் மாதம் முதலே படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பலரும் அந்தந்த மாநில அரசுகளிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் பலனாக தமிழகம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சின்னத்திரை மற்றும் டிவி நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

கிருமி நாசினி தெளிப்பது, கையுறை, முகக்கவசம் அணிவது, 60 பேரை மட்டுமே ஷூட்டிங் பணிக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. மேலும் ஷூட்டிங்கிற்கு அனுமதி பெறுவதற்கும் மாநிலங்களுக்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வந்த சீரியல் ஷூட்டிங்கில் பணியாற்றிய சில நடிகர், நடிகைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் இந்தி மெகா தொடர்,  “யே ரிஷ்தா கியா கெஹ்லாதா ஹே” ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. இதன் ஷூட்டிங் மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அதில் நடித்து வந்த நடிகர் சச்சின் தியாகி, சமீர் ஓன்கார், நடிகை ஸ்வாதி சிட்னி்ஸ் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தங்களது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளனர். 

இதையடுத்து படப்பிடிப்பில் பங்கேற்ற மற்றவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 4 டெக்னீஷியன்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். டிவி படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.