ஹிந்தி பட இயக்குநருக்கு சரமாரி அடி : போராட்டக்காரர்கள் வெறியாட்டம்!
ஜெய்ப்பூரில் பத்மாவதி படப்பிடிப்பிற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பாஜிராவ் மஸ்தானி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, அலாவுதீன் கில்ஜி மற்றும் பத்மினி ஆகியோரின் வரலாற்றைத் தழுவி பத்மாவதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.
ராணி பத்மாவதி கதாபாத்திரத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் ரஜபுத்திர இனத்தை இழிவு படுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இதனிடையே, படத்தில் இடம்பெறும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி ரஜபுத்திர இனத்தைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், படப்பிடிப்பு தளத்தில் இருந்த பொருட்கள் அடித்து நொறுக்கியதோடு, இயக்குனர் சஞ்சய்லீலா பன்சாலி மீது தாக்குதல் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்த நடைபெற்ற பேச்சு வார்த்தையில் படம் வெளியான பிறகு சர்ச்சைக்குரிய காட்சிகள் இருந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
